விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்

Su.tha Arivalagan
Dec 18, 2025,02:19 PM IST

ஈரோடு : விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது பைக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் தவெக தொண்டர்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் தவெக சார்பில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கிட்டதட்ட மாநாடு நடத்துவதை போல் லட்சக்கணக்கானவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த விஜய், அங்கிருந்து தன்னுடைய காரில் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கு தவெக.,வின் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்ற படி தவெக நிர்வாகிகளும், அவர்களை தொடர்ந்து விஜய்யும் உரையாற்றினர்.




விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது எதிரே இருந்த உயரமான கம்பத்தின் மீது தொண்டர் ஒருவர் ஏறி நின்றி கையை அசைத்தார். இதனால் பேச்சை நிறுத்தி விட்டு, அவரை கீழே இறங்கி வரச் சொன்ன விஜய், அவரை தவெக.,வினர் பாதுகாப்பாக கீழே இறக்கிய பிறகு, அவருக்கு பறக்கும் முத்தத்தை பரிசாக வழங்கிய பிறகே பேச்சை தொடர்ந்தார். கிட்டதட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் தனது காரில் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி புறப்பட்டார் விஜய்.


தடையை மீறி விஜய்யின் காரை தவெக தொண்டர்கள் பலர் தங்களின் பைக்கில் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டம்பாளையம் பகுதியில் பாலம் ஒன்றின் மீது சென்ற போது, ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்ற போது இரண்டு பைக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. அந்த பைக்கள் மீது பின்னால் வந்த பைக்குகளும் அடுத்தடுத்து மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த போலீசார், தவெக.,வினருக்கு விதித்த 84 விதிமுறைகளில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் தொண்டர்கள் யாரும் பின் தொடரக் கூடாது என்ற விதிமுறையும் ஒன்று. ஆனால் போலீசார் விதித்த நிபந்தனையை மீறி தவெக தொண்டர்கள் செய்த இந்த செயலால் விபத்து ஏற்பட்டுள்ளதால் இனி அடுத்தடுத்து விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு இன்னும் அதிகமான நிபந்தனைகள் விதிக்கவும், சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.