முதல் வாய்ப்பிலேயே சுற்றி வளைத்த உதயநிதி ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்!

Su.tha Arivalagan
May 13, 2026,01:07 PM IST

சென்னை: சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின்போது தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சரமாரியாக விஜய் அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை வைத்தனர்.


வழக்கம் போல தனது நிதானமான பாணியில் இதற்குப் பதில் அளித்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்.


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்போது பாயின்ட் பை பாயின்ட்டாக விஜய் அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். கடுமையாக விமர்சித்தார். எங்களது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாடி அரசைக் காப்பாற்றிக் கொண்டுள்ளீர்கள். சோபா அரசியலை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய ஆட்சியாக இது இருக்கும் என்று பார்த்தால் புஷ்பா பட ஆட்சியாக இருக்கிறது.




மக்கள் உங்களுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளை விட எதிர்த்து அளித்த வாக்குகள்தான் அதிகம். ரீல்ஸில் மட்டும் ஆட்சி நடத்துகிறீர்கள். ரியலாகவும் ஆட்சி நடத்த முயலுங்கள். போலியான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து விட்டீர்கள்.


மாதம் பிறந்தால் மகளிர் உரிமைத் தொகையைத் தர வேண்டும். இன்னும் பல திட்டங்கள் உள்ளன. அதையெல்லாம் நீங்கள் செய்தாக வேண்டும் என்று சரமாரியாக பேசினார்.


அதேபோல தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது யாரையும் ரகசியமாக சந்திக்க மாட்டேன் என்று முதல்வர் கூறினார். ஆனால் அவரை முகத்தை மூடிக் கொண்டு வந்து சந்தித்தது யார் என்பதை அவர் பகிரங்கமாக சொல்ல வேண்டும்.


உங்களுக்கு யார் வேண்டுமானாலும் ராஜகுருவாக இருக்கட்டும். ஆனால் அரசுப் பதவியாக அவரை அமர வைத்தது கண்டனத்துக்குரியது என்று சாடினார் பிரேமலதா விஜயகாந்த். குதிரை பேரம் நடப்பது குறித்து பேச்சு எழுந்திருப்பது வேதனைக்குரியது. அதுகுறித்து முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.


விஜய்யின் நிதானமான பதில்




எதிர்க்கட்சித் தரப்பில் இந்த இருவர் மட்டுமே அனல் பறக்கப் பேசினார்கள். இதற்கு முதல்வர் ஜோசப் விஜய் அதிரடியாகப் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் விஜய் தனது பாணியில் நிறுத்தி நிதானமாக தனது பதிலை அளித்தார். துள்ளிக் குதித்து பதில் கொடுப்பதற்குப் பதில் நமது பதிலை செயல்பாடுகளில் காட்டுவதே சிறந்தது என்று தனது பதிலுரையின்போது அவர் தெரிவித்தார்.


பிரேமலதா விஜயகாந்த் குறித்த குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கையில், ஜோதிடர் குறித்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். இதன் மூலம் ரத்தன் பண்டிட் நியமனத்தை அவர் ரத்து செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம், குதிரை பேர புகார் குறித்து அவர் கருணாநிதி பாணியில் சொல் விளையாட்டுப் பதிலைக் கொடுத்தார். அவர் கூறுகையில், குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்த அரசு குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல, குதிரை வேகத்தில் செயல்படும் அரசு என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.


ஆனால் முதல் வாய்ப்பிலேயே குதிரை வேகத்தை உதயநிதியும், பிரேமலதாவும் காட்டியிருப்பதாகவே தெரிகிறது. முதல்வர் விஜய்யும் அதே மீட்டரில் தனது பதிலடியைக் கொடுக்க ஆரம்பித்தால்தான் சமாளிக்க முடியும் என்பதும் தெரிகிறது. ஆனால் முதல்வர் விஜய் பாணி வித்தியாசமாக இருக்கிறது. போகப் போகப் பார்க்கலாம்.


அரசியலை மாற்றியவர் அரசியல் பாணிகளையும் கூட மாற்றத் திட்டமிட்டுள்ளாரோ என்னவோ!