Vote of Confidence: 144 பேரின் ஆதரவோடு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தவெக அரசு!

May 13, 2026,06:12 PM IST

சென்னை: தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் அரசினர் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் முதல்வர் சி ஜோசப் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.


தீர்மானத்திற்கு  எதிராக 22 அதிமுக எம்எல்ஏக்கள் மட்டும் வாக்களித்தனர். பாமக மற்றும் பாஜக உறுப்பினர்கள் மொத்தம் 5 பேரும் நடுநிலை வகித்தனர்.


எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். திமுக உறுப்பினர்கள் முழுமையாக வெளிநடப்பு செய்தனர். தேமுதிகவும் வெளிநடப்பு செய்தது.


தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை உருவாக்கியுள்ள தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றதால் விஜய் அரசு தொடர்கிறது.


முன்னதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் அரசினர் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதையடுத்து கட்சித் தலைவர்கள் பேசி வருகிறார்கள். முதலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் பேசினார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பாமக, மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அதிமுக, எஸ்.பி.வேலுமணி மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.





இன்றைய வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக பதிவான வாக்குகள் விவரம்:


தவெக - 105 (ஒரு காலியிடம், ஒரு உறுப்பினர் வாக்களிக்கத் தடை, சபாநாயகர் வாக்களிக்க முடியாது)

காங்கிரஸ் - 5

சிபிஐ - 2

சிபிஎம் - 2

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 2

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2

அமமுக - 1

எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக - 25



நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. சி.வி. சண்முகம் தலைமையிலான சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட ஒரு குழு, மக்கள் தீர்ப்பை மதிக்கும் வகையில் விஜய் அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்தது. இதையடுத்து நேற்று அவர்களை அவர்களது அலுவலகத்திற்கே போய் முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்து விட்டும் வந்தார். ஆனால் இன்று 25 பேர் மட்டுமே அவர்கள் பக்கம் இருந்தனர்.


எதிர்க்கட்சியான திமுக, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி நடந்ததால்  பெரும்பான்மையை நிரூபிப்பது விஜய்க்கு இன்னும் எளிதாகி விட்டது. மொத்தம் 171 பேர் மட்டுமே சபையில் இருந்தனர்.


சபையில் இருந்த உறுப்பினர்கள் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரையும் எண்ணி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


பாஜக, பாமக நடுநிலை:


விவாதத்தின் மீது பாஜக உறுப்பினர் போஜராஜன் பேசுகையில், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார். 


பாஜகவுக்கு சட்டசபையில் போஜராஜன் மட்டுமே உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல பாமக சார்பில் பேசிய டாக்டர் செளமியா அன்புமணியும் தனது பேச்சின் நிறைவில் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருப்பதாக அதாவது நடுநிலை வகிப்பதாக அறிவிததார். பாமகவுக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!

news

தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!

news

ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு

news

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!

news

Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!

news

பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!

news

சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி

news

கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்