சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
சென்னை : தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இன்று முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். அவர் பேசிற்கு பாதியிலேயே எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தாலும் தனது உரையை தொடர்ந்த முதல்வர் விஜய், தனது ஸ்டைலில் குட்டி கதை சொல்லியும், கிண்டலான டயலாக்குகள் மூலமும் திமுக.,விற்கு பதிலளித்தார். ஆரம்பத்தில் அவையில் இல்லாதவர்கள் பற்றி பேச விரும்பவில்லை என கூறி முதல்வர் விஜய், பிறகு சபாநாயகரின் அனுமதியுடன் திமுக.,வை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக தான், தான் சத்தமாக பேசியதாக சொன்ன முதல்வர் விஜய், பிறகு அவையில் இல்லாதவர்கள் டிவி.,யில் பார்த்து தனது பதிலை தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்லி பேசினார்.
சட்டசபையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறார். சட்டசபையில் எங்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முதல்வர் விஜய் மறுக்கிறார் என கொந்தளித்து பேசினார். பிறகு சிறிது நேரத்திலேயே தனது எக்ஸ்தள பக்கத்தில் முதல்வர் விஜய்யின் உரையை விமர்சித்து கருத்து பதிவிட்டார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல. முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது. குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu -வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.