யுகாதி பண்டிகை.. தெலுங்கு, கன்னட மக்களின் புது வருடப் பிறப்பு!
- ஸ்வர்ணலட்சுமி
விசுவாசு வருடம் 2026 மார்ச் மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை "யுகாதி பண்டிகை" அனுஷ்டிக்கப்படுகிறது. சைத்ர மாதத்தில் (தமிழில் பங்குனி) தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் யுகாதி பண்டிகை ஆண்டுதோறும் தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான கலாச்சார பண்டிகைகளில் ஒன்றாகும்.'யுகாதி' அல்லது 'உகாதி' என்று கூறப்படும் சொல் இரு வேறு சொற்களில் இருந்து தோன்றியதாகும்.
அதாவது 'யுகா' என்றால் (உலகத்தையும்) யுகத்தையும் 'ஆதி' என்றால் தொடக்கத்தையும், அதாவது ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தை உணர்த்துகிறது. ஒரு யுகத்தின் (உலகத்தின்) தொடக்க நாளான யுகாதி பண்டிகை கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த நாளாகும். தென்னிந்தியாவில் ஆந்திரா,தெலுங்கானா, தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு பேசும் மக்கள், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், மகாராஷ்டிராவில் 'குடிபாடுவா 'என்ற பெயரிலும் இது மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நேரம்:
மார்ச் மாதம் 18ம் தேதி அமாவாசையை அடுத்து 19ஆம் தேதி வியாழக்கிழமை பிரதமை திதியானது காலை0 6: 52 மணி முதல் மார்ச் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 04 :52 மணி வரை உள்ளது.
யுகாதி (Ugadi)பண்டிகையின் சிறப்பம்சங்கள்:
U - Ugadi
G - Gowravam
A - Anandam
D - Danam
I - Ishwaryam
யுகாதி பண்டிகை வசந்த காலத்தின் தொடக்கமாக கொண்டாடப்படும் ஒரு விஷேசமான பண்டிகை. பிரம்மன் உலகத்தை படைத்த நாளாக உகாதி பண்டிகை தெலுங்கு பேசும் மக்களால் மிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அனுஷ்டிக்கப்படுகிறது.
மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல்,பாரம்பரிய உடைகள் அணிந்து, வண்ணக் கோலங்கள் இட்டு மற்றும் வீட்டை மாவிலை தோரணங்கள் மலர்களால் அலங்கரித்து, அறுசுவை கலந்த 'யுகாதி பச்சடி 'செய்து முதலில் அதை உட்கொண்டு, பிறகு புதிய தொடக்கத்திற்காக இறைவனை வழிபடுதல்- குறிப்பாக விஷ்ணுவிற்கு லட்சுமிதேவிக்கும் சிறப்பு பூஜைகள்,கோவில்களில் பஞ்சாங்கம் படிப்பது போன்றவை இந்த நாளில் செய்வார்கள். யுகாதி பண்டிகை அன்று செய்யும் யுகாதி பச்சடி மிகவும் விசேஷமானது.
'யுகாதி பச்சடி ' செய்முறை மற்றும் உணர்த்தும் தத்துவம்:
யுகாதி பச்சடி செய்முறை:
1.வேப்பம்பூ (ஃப்ரெஷ்ஷாக )
2.மாங்காய் பொடியாக கட் செய்தது.
3. உப்பு தேவைக்கு ஏற்ப
4. மிளகுத்தூள் அல்லது பச்சை மிளகாய் (பொடியாக கட் செய்தது )
5. புளி -புதிய புளி.
6. வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை.
ஒரு பாத்திரத்தில் அல்லது மண் பானையில் புதிய புளியை வெந்நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வெல்லத்தை இடித்து போட வேண்டும், பிறகு அதனுடன் மிளகுத்தூள் அல்லது ,நறுக்கிய மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும் அதில் நறுக்கிய மாங்காய் மற்றும் வேப்பம்பூ கலக்க வேண்டும். யுகாதி பச்சடி தயாராகிவிட்டது.
(குறிப்பு:வீட்டில் இருக்கும் நபர்களை பொருத்து அதற்கு ஏற்ப தயார் செய்வது).
வாழ்க்கையின் தத்துவம்:
இந்த அறுசுவைகளும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம்,துவர்ப்பு,உவர்ப்பு ஆகியவை மகிழ்ச்சி, சோகம், கோபம், வெறுப்பு பயம் மற்றும் ஆச்சரியம் நிறைந்த மனித வாழ்க்கையின் கலவையை நமக்கு உணர்த்துகின்றன.
வேப்பம்பூ : கசப்பு (கவலை)
இனிப்பு :வெல்லம் (இனிப்பு)
புதிய புளி :புளிப்பு (வாழ்க்கையில் சவால்கள் )
பச்சை மிளகாய் அல்லது மிளகுத்தூள்: காரம் (கோபம் அல்லது உற்சாகம் )
பச்சை மாங்காய்: துவர்ப்பு (பழக்கவழக்கங்கள் ).
உப்பு: உவர்ப்பு சுவைக்கு (வாழ்க்கையின் சுவை)
இந்த அறுசுவை போல வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு சூழ்நிலைகள் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. அந்த அறுசுவை போல அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதே இந்த யுகாதி பச்சடியின் தத்துவம். யுகாதி பச்சடி வாழ்க்கை தத்துவம் மட்டுமின்றி மருத்துவ குணங்களும் நிறைந்தது. யுகாதி பச்சடியின் அடிப்படையே இந்த புத்தாண்டு முதல் ஆறு சுவைகள் எப்படியோ அதேபோல அனைத்து விதமான இனிமைகளும், சுவைகளும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதுதான்.
வசந்த காலத்தின் தொடக்கமான யுகாதி பண்டிகை அனைவர் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்த தென்தமிழ் சார்பாக அனைவருக்கும் "யுகாதி பண்டிகை" நல்வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.