மே 18.. மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் பயங்கரம்!

Su.tha Arivalagan
May 18, 2026,10:34 AM IST

- எம்.கே.திருப்பதி


ராவண தேசம் என்றுமே 

ரணம் பேசும்!

ராமர் காலம் தொட்டே 

ரத்த மணம் வீசும்!


அன்றைய

இலங்காபுரியில் துலங்கியது 

வைணவம் சைவம்!


அதாவது

அங்கு வழிபடப்பட்டது 

அரியும் சிவனும் என்ற

அவர்கள் தெய்வம்!


இடைப்பட்ட நாட்களில் 

எழுந்தது ஒரு 

புது மதம்! அதுதான்

புத்த மதம்!




அகிம்சை போதிக்கும்

அந்த மதம்

காலப்போக்கில்

கால் தடம் மாறி ...


ஆகிப்போனது 

களிரில் சுரக்கும் 

கன்னமதம்!


அந்த நாள் தொட்டு

இந்த நாள் வரை

எதற்கெடுத்தாலும் -  ஒரே

ஏடா கூடம்!


ஒரே

கிளையில் கிளர்த்தவர்கள் 

கிழக்கும் மேற்கும் என்றாகி 

கிழக்கு வெளுத்தாலே 

வழக்கு என்றாகிப் போனது 

வாழ்க்கைப் பாடம்!


ஆண்டு எண்பத்தி ஒன்றில் 

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு

பாழ் நூலகம் என்றானது!


எரித்ததன் எதிர் விளைவாக 

எழுச்சி பெற்ற தமிழினத்தால் 

ஆயுதப் புரட்சி உண்டானது!

இதனால் இங்கு

இலங்கை துண்டானது!


கிட்டத்தட்ட

வடக்கு முழுதும்

புலிப்படை வசமானது!


தரைப்புலி: கடற்புலி :

வான் புலி :  என

முப்படைக்கும் முப்பேர் கொடுத்த

முதல் புரட்சிப் படை 

என்பது நிஜமானது!


ஒருவன் வீரம்

உலகின் கண்களை உறுத்தியது!

உறுத்திய பின் 

உண்டாக்கிய சேதம்

உலகை உலுக்கியது!


ஆம்!

இறுதிப் போரின் 

இறுதி நிகழ்வில்

இரக்கமற்ற கூட்டம் 

இயம்பியது இப்படி..!


முள்ளிவாய்க்காலில் 

முகாமிடுங்கள்!

முடிந்தவரை  முன்னேறி

அந்த

முல்லை நிலத்தை

முத்தமிடுங்கள்!"


தவித்துக் கிடந்த தமிழினம்

தழை கண்ட செம்மறியாட்டம் 


அந்த

அழிவிடத்தில் கூடியது!

ஆபத்தை அறியாமல்

அபயம் கோரியது!


ஐயகோ!

கொடுமையிலும் கொடுமை!


பூவும் பிஞ்சுமாய் 

காயும் கனியுமாய் 

பழமும் வெம்பலமாய் 

பதுங்கியிருந்த அந்த 

பாழிடத்தில் ...


உலக வல்லரசுகளின் 

ஒருகையாக...

சிங்கள ராணுவம் 

குடிமக்களின் மீது 

கொத்துக் குண்டுகளை வீசியது!


விழுந்த குண்டுகள் கூட

வீழ்ந்தது தமிழினம் ' என

வீர வசனம் பேசியது!


இறந்து போனது 

இனமல்ல...

இரக்கம் இல்லாமல் போன 

இறுகிய மனம்!


மாண்டு போனது 

மதம் அல்ல...

மனித மாண்புகளின் 

பதம்!


"போற்றுகிறார்கள் 

புத்தன் பல்லை

புறக்கணிக்கிறார்கள்

புத்தன் சொல்லை!"


என்ற வாலி ஐயாவின் வரிகள் ...

வெறும் வரிகள் அல்ல!


இன்றளவும் அதுதான்

இலங்கைத் 

தமிழனின் வாழ்க்கை!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)