88 லட்சம் கோடி முதலீடு.. சவூதி - அமெரிக்கா உடன்பாடு.. நேட்டோ அல்லாத நாடக சவூதி அங்கீகரிப்பு

Su.tha Arivalagan
Nov 21, 2025,01:04 PM IST

- ச.கோ.வினோத்குமார்


வாஷிங்டன்: அரசு முறைப் பயணமாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே அணுசக்தி, ஆயுத விற்பனை மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வருடம் மே மாதம் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் சவுதி அரேபியாவுக்கு சென்று இருந்தார். அப்போதே இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு வார்த்தைகள் தொடங்கின. இந்த சந்திப்பின்போது 600 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் சவுதி அரேபியா முதலீடு செய்யும் என்று கூறியிருந்தது. இதற்கு அமெரிக்கா ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவும் சவுதி அரேபியாவில் அமைய உள்ள நியோம் என்ற எதிர்கால பிரம்மாண்ட நகரம் மற்றும் உட்கட்டமைப்பு உட்பட பல திட்டங்களில் முதலீடு செய்யும் என்று கூறியிருந்தது. 




இந்நிலையில் நேற்று சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்பு ட்ரம்ப் பேசுகையில் சவுதி அரேபியா அமெரிக்காவின் தொழில்துறையில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் என்று கூறினார். 


அமெரிக்காவும் சவுதி அரேபியாவிற்கு எஃப் 35 செக் விமானங்கள் மற்றும் 300 டாங்கிகள் வழங்குவதாக கூறியுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம் சீனாவும் சவுதி அரேபியாவுடன் நெருங்கிய நட்பு நாடாக இருப்பதால் எஃப் 35 விமானம் சவுதி அரேபியாக்கு வழங்கும்போது அதைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களை சீனா அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


நேட்டோ அல்லாத நட்பு நாடாக அங்கீகாரம்


அமெரிக்காவில் நடந்த இந்த சந்திப்பில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவை நேட்டோ அல்லாத நாடாக அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தினால் நேட்டோ நாடுகளுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உத்திரவாதம் சவுதி அரேபியாவுக்கு கிடைக்காது.  ஆனால் அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்க முடியும். 


சவுதி அரேபிய இளவரசரின் இந்த பயணம் அமெரிக்க சவுதி அரேபியா இடையே ஆன உறவினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இரு நாடுகளும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள நிலையில் இந்த சந்திப்பை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.


(ச.கோ. வினோத்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)