அறிவுக்கு வேலை கொடு (சிறுகதை)
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்கு 10 வயது. அவனுடைய தந்தை அச்சிறுவனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் பொறுப்புள்ள மனிதனாக உருவாக்க விரும்பினார். அதனால் அவனுக்கு ஒரு சோதனையை வைத்தார்.
அழுக்கு படிந்த ஒரு சட்டையை அவனிடம் கொடுத்து, அதை இருபது ரூபாய்க்கு விற்றுவிட்டு வரும்படி கூறினார். அச்சிறுவனும் அச்சோதனையை ஏற்றுக்கொண்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தான். பின் அதை அழுக்கு போக நன்கு துவைத்து, இஸ்திரி போட்டு சந்தைக்கு எடுத்துச் சென்று இருபது ரூபாய்க்கு விற்று விட்டான். தந்தையிடம் பணத்தை கொடுத்தான்.
தந்தை மீண்டும் அதேபோல், ஒரு சோதனை வைத்தார். அதே போன்றதொரு அழுக்கு சட்டையை மீண்டும் கொடுத்து அதை 200 ரூபாய்க்கு விற்கும்படி கூறினார். மீண்டும் யோசித்த சிறுவன் அச்சட்டையை நன்கு துவைத்து, இஸ்திரி போட்டு வண்ண நூல்களைக் கொண்டு விதவிதமான பூக்களை பலவிதமான தையல்களைக் கொண்டு சட்டையை அழகாக்கினான். மீண்டும் சந்தைக்கு எடுத்துச்சென்றான். சிறுவனின் கையில் இருந்த சட்டை பலரையும் கவர்ந்தது. 200 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டனர்.
பணத்தை தந்தையிடம் கொண்டு வந்து கொடுத்தான். தந்தை மீண்டும் அதேபோன்றதொரு சோதனையை வைத்தார். அதே போன்றதொரு அழுக்கு சட்டையை கொடுத்து அதை 2000 ரூபாய்க்கு விற்கும்படி கூறினார். சிறுவனும் அதை சுத்தமாக துவைத்து, இஸ்திரி போட்டு எடுத்துக் கொண்டான். ஊரின் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்திருந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரரை நேரில் சென்று சந்தித்தான். இந்தச் சட்டையில் தாங்கள் ஒரு கையொப்பம் இட வேண்டும் என கேட்டான்.
விளையாட்டு வீரரும் சிறுவனின் விருப்பத்தை ஏற்று கையொப்பம் போட்டுக் கொடுத்தார். அதை சந்தைக்கு எடுத்துச் சென்று உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரரின் கையொப்பம் உள்ள இச்சட்டை இரண்டு லட்சம் ரூபாய் என்று ஏலம் விட்டான். பலர் அச்சட்டையை வாங்க முன்வந்தனர். 2 லட்சம் ரூபாய்க்கு விற்று தந்தையிடம் பணத்தை கொடுத்தான். அவர் சொன்ன பணத்தின் அளவைவிட 100 மடங்காக திருப்பிக் கொடுத்தான். தந்தை பெருமிதம் அடைந்தார்.
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறும் ஒருவன் வாழ்க்கையில் தோற்பதில்லை என்ற கருத்தை இக்கதையின் மூலம் அறியலாம்.
(கதாசிரியர் ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)