வா.. பெண்ணே.. அழகின் வரையறையை மாற்றுவோம்!

Su.tha Arivalagan
Jan 16, 2026,04:30 PM IST

வ. துர்காதேவி


கயல்விழிகளல்ல, 

கருணை பொங்கும் கண்களே அழகென்பதை


ரோஜா நிற இதழ்களல்ல,

மலர்ச்சியாய் புன்னகைக்கும் இதழ்களே அழகென்பதை


சங்கு கழுத்தல்ல,

சத்தியத்திற்கு மட்டுமே தலை வணங்கும் கழுத்தே அழகென்பதை...


வெள்ளாவியில் வெளுத்த தோல் அல்ல, 

பிறர் துன்பம் கண்டு துடிக்கும் சதையே அழகென்பதை....




தங்க முலாமிட்ட அங்கங்களல்ல,

அதன் பின்னே மௌனமாய் வீற்றிருக்கும் தூய மனதே அழகென்பதை....


வாழைத்தண்டு கால்களல்ல,

ஓயாமல் ஓடி உழைக்கும் திடமான கால்களே அழகென்பதை


காலம் காலமாய்

பொய் கவி புனையும்

கவிஞர் கூட்டத்துடன்,

இன்றைய AI உலகமும்

கண்மூடித் திணிக்கும்

அழகின் வரையறையை

மாற்றுவோம் நாம்

இக்கணம் முதலே


(வ துர்காதேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி-நெசல், திருவண்ணாமலை)