சிவப்பழகி.. அவளன்றி ஓரணுவும் அசையாது.. அவளன்றி யார் பசியும் ஓயாது!
- வே.ர.விஜயலட்சுமி
அவள் நல்ல சிவப்பு காண்கையில் வியப்பு
ஊர் மக்கள் கூட்டம் அவளைத் தேடி பெரும் தவிப்பு.
கற்பில் அவளோ பெரு நெருப்பு
விளையாட்டாய் விஷமம் செய்தால்
வெகுண்டெழுந்து வெடித்திடுவாள்...
சில்மிஷம் செய்தாரைச் சிதறுகாய் ஆக்கிடுவாள் ..
ஆயினும் குடும்பப் பாங்காய் குலம் காக்க உதவிடுவாள்.
பசிபோக்கச் செய்திடுவாள்.
அவளன்றி ஓரணுவும் அசையாது..
அவளன்றி யார் பசியும் ஓயாது....
உலகமே அவள் பின்னே ஓடுகிறது...
அவளது வருகைக்கு வழிமேல் விழி வைத்து ஏங்குகிறது.
தன்மையான அவள் திண்மையான மனம் கொண்டாள்.
ஏழைக்கு இரங்கும் ஈசனைப்போல் இலகுவாக எரிந்திட்டாள்.
உலகோர் உவந்து தேட உச்சாணிக் கொம்பில் அவள்
இப்போது ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டு ஆங்காரமாய் சிரிக்கின்றாள்
ஆடி அடங்கும் மானிடப் பிறவியில்
கிடைத்ததைப் பகிர்ந்துண்டு மனிதநேயம் பேணிடாமல்
அழிவுச் செயலை நோக்கி அன்றாடம் ஓடுகிறது..
கிடைத்தற்கரிய மானிடப்பிறப்பை
உதாசீனம் செய்து வெட்ட வெளியில் வேடிக்கை பார்க்கிறது...
புற அழகில் மயங்கி உள் ஒளியைத் தொலைக்கிறது....
மனிதா நீ மாறும் நாளே எனக்குத் திருநாள்..
அந்நாளில் நானே உள்ளத்தில், இல்லத்தில் வந்தமர்வேன்.,.
தேடாதே என்னை அதுவரையில் என்றாள் சிவப்பழகி.
குணத்தில் குன்றிலிட்ட விளக்காகிப் போனாள்..
நமது மதிப்பிலுமே எட்டாத உயரத்தினள் ஆனாள்!!!!!
(V.R. Vijayalakshmi ,graduate teacher for ENGLISH,CW Group, Kanchipuram)