Short Story: தபால் பெட்டி
- வீ. தமிழ்ச்செல்வி
இப்போதையெல்லாம் உன்னை எங்கும் காணமுடிவதில்லை... உன் தேவை குறைந்து நீ காணாமல் போய்விட்டாய் இன்றைய தலைமுறைக்கு..
பூந்தோட்டத்தையும், மணற்பரப்பையும், இனிப்பு பண்டம் விற்கும் கடையையும் தேடி அது இருக்கும் திசையை நோக்கி ஓடி வரும் மழலையர் போல தினமும் வந்து குவியும் மடல்களையும் கடிதங்களையும் அஞ்சல்களையும் அள்ளி எங்கள் ஊர் தபால்காரர் பையில் திணிப்பதை பார்த்த நாட்கள் ரம்யமானவை.. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என்ற விழா நாட்களுக்கெல்லாம் வாழ்த்து மடல்களாக சினிமா நடிகர், நடிகைகளின் புகைப்படங்களையும் இயற்கை காட்சிகளையும் தெரிவு செய்து முகவரி எழுதி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி அளவில்லா ஆனந்தம் கொள்வோம்..
வாழ்த்து மடல்களோ கடிதங்களோ அவை ஆண்டுகள் பல சேமித்து வைத்து அதை இவை போன வருட மடல்கள் இவைகள் அதற்கு முந்தைய வருட மடல்கள் என்றெல்லாம் அந்த வாழ்த்துக்களையும், அன்பினையும் சேகரித்து வைத்த உறவுகளின் பாசத்தை அளப்பில்லா உவகை கொண்டு ஆச்சரியமாய் அளந்து அளந்து கதை கதையாய் நண்பர்களிடம் பகிர்ந்து எங்கள் கொண்டாட்டங்களை இனிக்க இனிக்க கொண்டாடி தீர்த்தோம் நல்ல செய்தியோ!! துக்கச்செய்தியோ!! எதுவாயினும் வாசல் முன் வந்து தபால்களை அளிக்கும் தபால்காரரைக் கண்டவுடன் கனிவான புன்னகை புரிந்து கடிதத்தை படிக்கச் சொல்லி பொறுமையாய் காத்திருந்து அதன் பொருளை தெரிந்து கொண்டோம்..
அப்போதெல்லாம் வீடுகள் எல்லாம் பூட்டப்படாமல் இருக்கும் ஆனால் நீ என்னவோ அவ்வளவு பாதுகாப்பாய் சங்கிலியால் கட்டி, பூட்டி தொங்கவிடப்பட்ட காட்சி எங்களுக்கு எங்கள் ஊர் அய்யனார் கோவத்துடன் முறைத்துக் கொண்டு நிற்பது போல தோன்றும் ஒரு பயமும் வரும்..
அது மட்டுமா சில உறவினர் சிறுவர்களிடம் கடிதங்களை கொடுத்து தபால் பெட்டியில் போடச் சொல்லி கொடுப்பார்கள் அதை தபால் பெட்டியில் இடுவதற்கு நான் நீ என்று போட்டி வைத்துக்கொண்டு யார் முதலில் தபால் பெட்டியை தொட்டு விடுகிறாரோ அவர்களே கடிதங்களை வென்றவர்.. அப்படியெல்லாம் முட்டி மோதி சண்டையிட்டு முட்டிக்கொண்ட தருணங்கள் பல..
விடியற்காலைப் பொழுதின் வீட்டு முற்றத்தில் கேட்கும் ஒரு குருவியின் கூ.. கூ.. கூ.. என கூவும் இன்னிசை போல பலரின் இனிய மொழிகளையும், அவர்களின் கனவுகளையும், தினச்செலவிற்கு தந்தையின் பண அஞ்சலை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பையும், தூரத்தில் வாழும் நபர்களின் ஏக்கப் புலம்பல்களையும், அன்பையும் சுமந்து நின்று என்றும் சிவப்பு வண்ணம் பூசிய உன்னை நான் மறந்திடேன்..
எப்போதாவது உன்னை காண நேர்ந்தால் அந்த பழைய நினைவலைகள் ஒரே பாய்ச்சலில் ஒரு மின்னல் போல மனதில் வந்து செல்லும் அவ்வளவுதான்... மீண்டும் ஒருமுறை உன் பெயரை உச்சரிக்க விரும்பி உச்சரித்துக் கொள்கிறேன்
தபால் பெட்டி... தபால் பெட்டி..!
(வீ. தமிழ்ச்செல்வி, அஉபள்ளி, அங்கு செட்டிபாளையம், பண்ருட்டி)