சத்தியம் நிறைவேறியது!
- வீ. தமிழ்ச்செல்வி
நான் அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
மனம் அதைப்பற்றி யோசனையில் ஆழ்ந்திருந்தது.
அவள் அதைப்பற்றி பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறாள். கண்டிப்பாக என்னைத் தவிர வேறு யார் உதவுவார்கள் அவளுக்கு..
அவளை சந்தித்து பேசிய தீர வேண்டும்.. நிச்சயமாய் அவளுக்கு தைரியம் இல்லை.. ஆனால் இந்த முறை விட்டு விடுவதாக இல்லை.. அவளை சம்மதிக்க வைக்க ஒரு போராட்டமே நிகழ்ந்து விட்டது.. எப்படியோ யாருக்கும் தெரியாமல் நான் சென்று வருகிறேன் என்று வாக்களித்து, நம்பிக்கை அளித்த பின்பே அவள் சற்று சமாதானமானது போல் தோன்றியது..
நானும் மிக வேகமாக என் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்று போகும் வழியில் யாராவது பார்க்கிறார்களா பார்த்துக்கொண்டே சென்றேன், ஆனாலும் யாராவது பார்த்துவிட்டால் உள்ளுக்குள் ஒரு பயம் உலாவிக் கொண்டு இருந்தது. ஆனால் மனதில் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு சென்றேன். இருப்பினும் யாரேனும் பார்த்தால் பல கேள்விகள் கேட்பார்கள் யாருக்கு? எதற்கு? ஏதாவது விசேஷமா? என்றெல்லாம் பல கேள்விகள் எழும். அங்கு எல்லாவற்றிற்கும் என்னால் பதிலளிக்க நேரமில்லை.
எப்படியோ யாரும் பார்க்காத வண்ணம் நான் அதை வாங்கி விட்டேன். ஆனாலும் மனதில் ஒரு பிரம்மை.. விளையாடச் சென்று இருக்கும் அண்ணனிடம் அல்லது வயலுக்கு நீர் பாய்ச்ச சென்று இருக்கும் அப்பாவிடம் பிடிபட்டால் என்ன செய்வது என்ன சொல்லி சமாளிப்பது என்றெல்லாம் எண்ணிக்கொண்டு ஒரே வீச்சாய் மூச்சு வாங்க வந்து சேர்ந்தேன்..
நல்லவேளை வீட்டில் யாரும் இல்லை. இங்கு உட்கார்ந்து வெற்றிலை இடிக்கும் உரலில் வெற்றிலையையும் பார்க்கையும் போட்டு இடித்துக் கொண்டிருக்கும் பாட்டியையும் காணவில்லை... சரி என்று வீட்டு வாசலில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்ல விரைந்தேன். ஆயினும் பயத்தின் உச்சியில் வியர்த்துவிட்டது. ஆனாலும் நான் பின்வாங்க போவதில்லை. நான் அவளுக்கு சத்தியம் செய்து இருக்கிறேன் நான் வருவேன் என்று.. அவள் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்... நான் அவளை ஏமாற்ற எண்ணவில்லை.
உடனே நான் வாங்கி வந்ததை அவள் கையில் கொடுத்தேன் அதை பிரித்து அதனை அவள் போட்டுக் கொண்டாள். கண்ணாடியின் முன் நின்றாள் ..
அவளே ரசித்து ரசித்து மகிழ்ந்தாள் ..
ஆம் அது அவளுக்கு அழகாய் இருந்தது அவள் முகம் மிக பொலிவாய் இருந்தது அவள் சந்தோஷத்தில் அவளின் சிரிப்பு அழகாய் காட்சியளித்தது. திரும்பத் திரும்ப சிரித்து பேசி மகிழ்ந்தாள் ..
அவள் உதட்டில் பூசிய அந்த செந்நிற வண்ண பூச்சு அவள் உதடுகளை மிக எடுப்பாய் காட்டியது.. அவள் சிரிப்புக்கு நிகரே இல்லை. உடனே என்னை கட்டி அணைத்துக் கொண்டாள். அவளது அணைப்பில் அவளின் சந்தோஷத்தை உணர்ந்தேன்.. எப்போதும் இல்லாத அளவிற்கு என் அக்கா தன்னை கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன் முகத்தைப் பார்த்து ரசிக்கும் வேளையில் அங்கு மேலே எரியும் சிறிய ஒளியின் வெளிச்சத்தில் அவள் கன்னங்கள் ஜொலித்த வண்ணம் கன்னங்களில் குழி விழ அவளின் முகம் ஒளி வீசிக் கொண்டிருந்தது ...
ஆம் அந்த நாட்களில் உதட்டு சாயம் பூசவும், கண்களில் மையிட்டு கொள்ளவும் வீட்டில் அனுமதி இல்லை.. ஆனால் இன்றோ மக்கள் நித்திரையில் கூட உதட்டுச் சாயம் பூச மறப்பதில்லை!
(தமிழ்ச்செல்வி வீ, பட்டதாரி ஆசிரியர், அஉப, அங்கு செட்டிப்பாளையம், பண்ருட்டி ,கடலூர் மாவட்டம்)