வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 முருகப்பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாடு மற்றும் விரத நாட்களில் மிகச் சிறப்பானது வைகாசி விசாகம். இந்த நாள் முருகப்பெருமான் அவதரித்த தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமியும்,விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே வைகாசி விசாகமாக கொண்டாடி வருகிறோம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமான புகழ்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா மே மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி, 10 நாட்கள் மே 30 சனிக்கிழமை வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மே 21ஆம் தேதி புகழ்பெற்ற வசந்த திருவிழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
தேதி & நேரம்:
விசாக நட்சத்திரம்:
மே 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:38 மணிக்கு தொடங்கி மே 30ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1:20 மணி வரை உள்ளது.
பௌர்ணமி திதி :
மே 30ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 11:59 மணிக்கு தொடங்கி மே 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 02 : 16 மணி வரை உள்ளது.
வைகாசி விசாக வரலாறு:
சூரபத்மன் என்னும் அசுரன் சிவபெருமானை நினைத்து பல ஆண்டுகள் கடும் தவம் செய்தான். அவன் தனக்குத் தாயின் கருவில் உருவாகாத சிவசக்தி ஒன்று சேர்ந்த ஒரு சக்தியால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று சிவபெருமானிடம் இருந்து வரம் பெற்றான். இந்த வரத்தால் அசுரன் தேவர்களை துன்புறுத்தினான். அதனால் தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட தன் நெற்றிக்கண் திறந்து, அதில் இருந்து வெளிப்பட்ட 6 தீப்பொரிகள் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு பகுதிகளாக விழுந்தன.
அந்த ஆறு தீப்பொரிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகை பெண்களிடம் வழங்கினார் சிவபெருமான். அன்னை பார்வதி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து தன்னுடைய சக்தியால் ஆறுமுகமும் 12 திருக்கரங்களுடனும் கொண்ட உருவமாக மாற்றினாள்.
பார்வதியின் சக்தியில் உருவான வேலை முருகப்பெருமானுக்கு ஆயுதமாக வழங்கினாள். முருக பெருமான் வேல் கொண்டு சூரபத்மனையும், அவனது சகோதரர்களையும் போரில் வெற்றிக் கொண்டு,வதம் செய்து, தேவர்களை காத்தார். தீமைகளை அழித்து, நன்மையை காப்பதற்காக முருகப்பெருமாள் அவதரித்த தினமே வைகாசி விசாகம் ஆகும்.
வைகாசி விசாக சிறப்புகள்:
27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது அன்றைய தினம் நாம் முறையாக விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொள்வதனால் நம் வாழ்வில் முன்னேற்றங்கள் படிப்படியாக வந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
கந்தா..கந்தா...என்று கவி பாடி முருகப்பெருமானை தொழுவோர்க்கு இந்தா... இந்தா....என்று வரங்கள் அள்ளித் தருவான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் வடபழனியில் இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வழிபாடு:
வைகாசி விசாக நாளன்று அதிகாலையில் எழுந்து, நீராடி,தூய ஆடை அணிந்து,பூஜை அறையில் குத்து விளக்கேற்றி,அலங்கார மேடையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் படத்தை வைத்து, செவ்வரளி மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து, கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்தர் அனுபூதி, பாராயணம் செய்வது சிறப்பு.இனிப்பு அப்பம், நைவேத்தியம் படைத்து தீப தூப ஆராதனை செய்து வழிபட முருகன் அருள் கட்டாயம் கிடைக்கும். காலை அல்லது மாலை நேரங்களில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று நெய் தீப மேற்றி வழிபாடுகள் செய்வது விசேஷம்.
ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து, காவடி எடுத்து பாதயாத்திரையாக முருகப்பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். புரோகிதர்கள் பலரும் ஒன்று சேர்ந்து வைகாசி விசாகத்தன்று "குக் குட " ஹோமம் நடத்துவார்கள் இந்த ஹோமம் மிகவும் விசேஷமானதாகும்.
குடும்பத்தில் அமைதி,ஒற்றுமை, நிம்மதி,செல்வம்,மகிழ்ச்சி, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்," வைகாசி விசாகத்தில் விசாகனை வழிபட வெற்றிகள் குவியும்.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.