பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!

Swarnalakshmi
Dec 29, 2025,12:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி அதன் சிறப்புகளைப் பார்ப்போம். விசுவாவசு வருடம் 2025 டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மார்கழி மாதம் 15 ஆம் நாள் வைகுண்ட ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது.


பெருமாள் வழிபாட்டிற்குரிய விரதங்களில் மிகவும் உயர்வான முக்கியமான விரதம் 'ஏகாதசி 'விரதம் ஆகும். ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். கிருஷ்ணனுக்கு மிகவும் விருப்பமான மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி விரதம் இருப்பதனால் அளவில்லாத பலன்களும், நலங்களும்  கிடைக்கும்.


ஒவ்வொருவர் வாழ்விலும் துன்பம் நீங்கி,வெற்றி கிடைக்க, செல்வ செழிப்புடன் வாழ, நோய்கள் நீங்கி, ஆரோக்கியமான வாழ்க்கை பெற வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற  ஏகாதசி விரதம் இருப்பது அதீத சிறப்பு.


வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என மாதம் இருமுறை மற்றும் வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் அமையும். திதிகளில் பதினோராவது திதி ஏகாதசி திதியாகும்.




ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாள் வழிபாடு செய்ய இயலாதவர்கள்  மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதமிருந்து மனதார பெருமாளை வழிபட்டால் வருடம் முழுவதும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 


வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து,இரவு முழுவதும் கண் விழித்து சொர்க்கவாசல் ( பரமபத வாசல்) வழியாகச் சென்று பெருமாள் தரிசனம் செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாவங்கள் நீங்கி, பிறப்பு- இறப்பு இல்லாத மோட்ச நிலையை தரும் விரதம் என்பதால் இந்த நாளை "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.


இந்த ஆண்டு 2025 மிகச் சிறப்பான வருடம் ஏனெனில் இவ்வருடம் இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் அமைந்துள்ளது. ஒன்று ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. மற்றொன்று  ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி "வைகுண்ட ஏகாதசி" அமைந்துள்ளது.


வைகுண்ட துவார தரிசனம்:


டிசம்பர் 30ஆம் தேதி 2025 முதல் ஜனவரி 8, 20 26 வரை. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்  மற்றும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு என்பது மிகவும் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பக்தர்கள் பரமபத வாசலை தரிசிக்கின்றனர். மேலும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானம் என அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.


நாளை டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:45 மணிக்கு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு கோலாகலமாக நடைபெறும். அனைத்து ஊர்களிலும் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் திரளாக வந்து சொர்க்கவாசல் தரிசனம் செய்வர். ஏகாதசி விரதமானது ஏகாதசி திதியில்  தொடங்கி, துவாதசி திதியில் நிறைவு செய்வதாகும். ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, பெருமாள் மந்திரங்கள் மனதார நினைத்து, மறுநாள் புதன்கிழமை "பாரணை" அன்று அனைத்து காய்கறிகளையும் வைத்து சமையல் செய்து, பெருமாளுக்கு படைத்து வழிபாடுகள் செய்த பின்னர் தங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு, பாவங்கள் நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.


வைகுண்ட ஏகாதசி அன்று வீடுகளில் பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி இலைகளால் மாலை அணிவித்து, மா விளக்கு ஏற்றி, தீப தூப ஆராதனைகள் செய்து பெருமாள் மந்திரங்கள் படிப்பது சிறப்பு.


"கோவிந்தா கோவிந்தா" என பெருமாளை அழைத்து, " ஓம் நமோ நாராயணாய" எனும் விஷ்ணுவின் சக்தி வாய்ந்த மந்திரம் உச்சரித்துக் கொண்டே இருப்பது சிறப்பு. மேலும் அரச மரத்தடியில் நல்லெண்ணெய்  தீபம் ஏற்றி இந்த மந்திரங்களை படிப்பது மன அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் பெருக்கும்.


ஆயிரம் விஷ்ணு நாமங்களைக் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமம், வைகுண்ட ஏகாதசி நாளில் படிப்பது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திடுங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.