Short Story: நல்ல மருமகள்!
- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்
சிவராமன், காமாட்சி தம்பதிகள். அவர்களுக்கு ஒரு மகன் ரவி, ஒரு மகள் லலிதா.
ரவிக்கு திருமணம் ஆனது மனைவி உமா. திருமணமான முதல் மாத சம்பளம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் கொடுக்கச் சென்றான்.
"இங்கு வாருங்கள்"
"இரு. அப்பாவிடம் சம்பளம் கொடுத்துவிட்டு வருகிறேன்"
"விஷயமே அதில்தான் இருக்கிறது. இங்கே வாருங்கள்"
(அனைவரும் திடுக்கிட்டனர்)
ரவி தனக்குள் " என்ன இவள் சம்பளம் அப்பாவிடம் கொடுக்க கூடாது என்கிறாளா?தெரியவில்லையே". அவளிடம் சென்று என்ன விஷயம்? என்றான்
"சம்பளம் எவ்வளவு?"
"60,000 ரூபாய்"
"சரி வீட்டுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?"
"இது என்ன கேள்வி? அதை அப்படியே கொடுத்து விடுவேன்".
"உங்கள் செலவிற்கு?"
"அப்பாவிடம் கேட்டு வாங்கிக் கொள்வேன்"
"இனி அது நடக்காது"
(அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது)
"நீ என்ன சொல்ல வருகிறாய்?"
"இனிமேல் வீட்டு செலவிற்கு 15,000 ரூபாய் மட்டும் கொடுங்கள் போதும்".
"என்ன உளறுகிறாய்?"
"காரணத்தோடுதான் சொல்கிறேன்"
"என்ன காரணம்?"
"வீட்டிற்கு15,000 ரூபாய். நமக்கு 5,000 ரூபாய் போதும்"
"மீதி 40,000 ரூபாய்?"
"அதை பேங்கில் இப்பொழுதுலிருந்தே சேமிக்க ஆரம்பித்து விடுங்கள்"
"ஏன்?"
"லலிதாவின் வயது 15. இன்னும் 4 வருடங்கள் போனால் அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும். அப்பொழுது எவ்வளவு செலவாகும்? மாப்பிள்ளை வீட்டில் எவ்வளவு கேட்பார்கள்? என்றெல்லாம் தெரியாது. அதனால் இப்பொழுதிருந்தே சேமித்து வைத்தால் தோராயமாக 20 லட்சம் வரும். அப்பொழுது அவள் கல்யாணத்தை சிறப்பாக நடத்தலாம். அவள் கல்யாணத்தை அப்பாதான் முன்னிருந்து நடத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. அண்ணனான நீங்கள்தான் முழு பொறுப்பேற்று நடத்த வேண்டும். அதனால் தான் மாதம் 40,000 ரூபாய் சேமிக்க வேண்டும் என்கிறேன். மீதி இருக்கும் பணத்தில் நாம் சிக்கனமாக ஆடம்பரம் இல்லாமல் வாழ்வோம்"
"உனக்கு எப்படி இந்த யோசனை வந்தது?"
"நம் திருமணத்தின் பொழுது எங்கப்பா இவ்வாறு சொன்னார். உனக்கு நாத்தனார் ஒருத்தி இருக்கிறாள். நினைவில் வைத்துக்கொள். அவளது கல்யாணத்தை நீயும் உன் கணவரும்தான் சிறப்பாக நடத்த வேண்டும். அதன் மூலம் மாப்பிள்ளையும் நீயும் உன் புகுந்த வீட்டு மனிதர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும்."
"நமக்கு நாளைக்கு குழந்தை பிறந்தால் இந்த 5,000 ரூபாய் போதுமா?"
"சிக்கனமாக இருந்தால் தாராளமாக போதும். அப்படி போதாவிட்டால் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன். எக்காரணம் கொண்டும் லலிதா கல்யாணத்திற்காக ஒதுக்கும் பணத்தில் ஒரு பைசா கூட எடுக்கக் கூடாது. ஏனெனில் இன்று முதல் அது அவளது பணம். லலிதா எனக்கு நாத்தனார் மட்டும் இல்லை. எனக்கு குழந்தை போல. அவள் புகுந்த வீட்டில் போய் கண் கலங்கக்கூடாது. இதுதான் எனது முடிவு"
இதை கேட்ட சிவராமன் உமாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். காமாட்சி ஓடிவந்து உமாவை அனைத்துக் கொண்டு "உமா, உன்னை மருமகளாக அடைந்தது நாங்கள் செய்த பாக்கியம்" என்றாள்.
லலிதா ஓடிவந்து உமாவை கட்டிக்கொண்டு "அண்ணி, நீங்கள் எனக்கு இனிமேல் அம்மாதான்" என்றாள். ரவிக்கு அவளை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.
அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருகியது
(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)