தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
சென்னை: தவெகவிடம் விசிக பதவிகளைக் கோருவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. அவதூறானவை என்று அக்கட்சி கூறியுள்ளது.
தவெக ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஆதரவு தருவதாக 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறி விட்டன. காங்கிரஸ் முதல் ஆளாக கூட்டணியாகவே வந்து விட்டது. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காக தவெகவும், தமிழ்நாடும் காத்துக் கொண்டுள்ளன.
ஆனால் இதுவரை விசிக தனது முடிவை அறிவிக்காமல் உள்ளது. நேற்றே சொல்வதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்தி வரவில்லை. காலையில் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் நடக்கவில்லை. தற்போது மாலை 4 மணிக்கு விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் முடிவைத் தெரிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விசிகவின் தாமதத்தால் பல்வேறு சலசலப்புகள் கிளம்பியுள்ளன. விசிக சார்பில் ஏகப்பட்ட கோரிக்கைகள், நிபந்தனைகள் வைக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன. இது தவெகவினர் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் விசிக எம்.பி. ரவிக்குமார் இதை மறுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், விசிக பல்வேறு பதவிகளைக் கோருவதாகவும், நிபந்தனைகளை விதிப்பதாகவும் தற்போது பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. இத்தகைய செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், விசிகவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு ஊடகங்கள் துணை போக வேண்டாம் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் விசிக தனது முடிவை அறிவிக்க இவ்வளவு அவகாசம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாமே. இது தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்க்குமா என்று சாமானிய பொதுமக்கள் கூட கேட்க ஆரம்பித்துள்ளனர். விரைவில் திருமாவளவன் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.