வெண் முத்தும் பனித்துளியும்

Su.tha Arivalagan
May 15, 2026,04:47 PM IST

- முனைவர் கோ. லதா


காலை ஆறு மணி. வைகை கரையோரம் காற்றில் ஈரம் மிதந்தது. மரகதம் பாட்டி தன் முற்றத்தில் செம்பருத்தி செடியின் இலையில் படர்ந்த பனித்துளியை விரலால் தொட்டாள். தொட்டதும் அது காணாமல் போனது.


"பாத்தியா கண்ணு, சூரியன் வர்றதுக்குள்ள இது ஓடிப்போயிடும். ஆனா கடலுக்குள்ள இருக்கிற முத்து? அது வெயிலுக்கு கரையாது" என்றாள் பேத்தி தாமரையிடம்.


தாமரைக்கு இருபத்தி மூன்று வயது. நகரத்தில் வேலை. மூன்று வருடமாய் அருண் என்ற பையனை காதலிக்கிறாள். ஆனால் கடந்த மாதம் சின்ன சண்டை. அருண் பேசாமல் விலகிவிட்டான். "நம்ம உறவு பனித்துளி மாதிரி, கொஞ்சம் வெயில் பட்டா காணாம போயிடுச்சு பாட்டி" என்று கண்கலங்கினாள்.


பாட்டி சிரித்தாள். "அப்ப உன் உறவு பனித்துளியே இல்ல கண்ணு. பனித்துளின்னு நீ நினைச்ச ஏமாற்றம் அது."


அறுபது வருடம் பின்னோக்கி போனாள் பாட்டி. பதினாறு வயது மரகதம். பக்கத்து ஊர் முத்து. ரெண்டு பேரும் சிறுவயது தோழர்கள். முத்து கடலுக்கு போவான். முத்து குளிப்பான். ஒருநாள் கடல் கொந்தளிப்பில் அவன் படகு கவிழ்ந்தது. ஊரே அவன் செத்துட்டான்னு சொல்லிடுச்சு. மரகதத்தை வேறு ஒருவருக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு.


கல்யாண நாள். மணமேடையில் மரகதம். திடீரென வாசலில் சத்தம். கால் ஊனமாகி, உடம்பெல்லாம் தழும்போடு முத்து நின்றான். "இவதான் என் உசிரு" என்று கத்தினான். ஊர் சிரித்தது. "கால் இல்லாதவனுக்கு பொண்ணு கேக்குதா?" என்று ஏளனம்.




மரகதத்தின் அப்பா முத்துவை அடித்து துரத்தினார். ஆனால் மரகதம் மணமேடையை விட்டு இறங்கி, முத்துவின் கையை பிடித்தாள். "இவன் உசுரோட இருக்கான். அதுவே போதும். இவன் கால் இல்லன்னா என் தோள் இருக்கு" என்றாள்.


ஊர் காறி துப்பியது. சொத்து இல்லை, வீடு இல்லை. கடற்கரை ஓரம் குடிசை. முத்து சிப்பி விற்றான். மரகதம் கூடை பின்னினாள். பசி, பட்டினி, நோய். பத்து வருடம் குழந்தை இல்லை. ஊர் "பாவி பொண்ணு, வம்சம் இல்லாம போச்சு" என்றது.


ஒருநாள் புயல். குடிசை பறந்தது. முத்துவுக்கு காய்ச்சல். மரகதம் கடலில் இறங்கி சிப்பி பொறுக்கினாள். ஒரு பெரிய சிப்பி. உடைத்தால் உள்ளே வெண்முத்து. அதை விற்று வைத்தியம் பார்த்து, சின்ன வீடு கட்டினார்கள். அடுத்த வருடம் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.


"அந்த முத்து இன்னும் இருக்கு கண்ணு" என்று பாட்டி தன் பெட்டியை திறந்தாள். சின்ன டப்பா. உள்ளே பழைய பஞ்சில் சுற்றி வைத்த வெண்முத்து. பால் நிறம் மாறவே இல்லை.


"உன் தாத்தா செத்து முப்பது வருஷம் ஆச்சு. ஆனா இந்த முத்து இன்னும் இருக்கு. ஏன்னா அது கடலின் ஆழத்துல, அழுத்தத்துல, வலியில உருவானது. வெயில் பட்டா கரையாது."


தாமரை முத்தை கையில் வாங்கினாள். குளிர்ந்திருந்தது. கனமாக இருந்தது.


"பனித்துளி அழகுதான். காலையில மின்னும். ஆனா அதுக்கு ஆயுசு கம்மி. வெயில் பட்டா, கை பட்டா காணாம போயிடும். உறவுன்னா முத்து மாதிரி இருக்கணும். கடலுக்குள்ள மணல் துகள் குத்தி குத்தி, வலியை தாங்கி, வருஷ கணக்கா பொறுத்து உருவாகணும். அப்பதான் வெயிலுக்கு கரையாது."


"அருண் போனது வலிக்குது பாட்டி."


"வலிக்கட்டும். ஆனா ஒன்னு கேளு. சண்டை வந்ததும் ஓடுறவன், வெயில் அடிச்சதும் கரையுற பனித்துளிதான். அவன் போனது நல்லது. உண்மையான உறவு வெயிலுக்கு பயப்படாது. மழைக்கு கரையாது. புயலுக்கு உடையாது. அது ஆழத்துல இருக்கும். அழுத்தத்துல உருவாகும்."


தாமரைக்கு புரிந்தது. அருணுடன் இருந்தது காதல் இல்லை. பனித்துளி. காலையில் மின்னியது. வெயில் பட்டதும் காணாமல் போனது. அழ வேண்டியதில்லை.


ஒரு மாதம் கழித்து, தாமரை அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த கதிர். அமைதியானவன். தாமரையின் வேலைகளில் உதவினான். அவள் கோபப்பட்டால் பொறுத்தான். ஒருநாள் தாமரைக்கு காய்ச்சல். வீடு வரை வந்து கஞ்சி வைத்து கொடுத்தான். "ஏன்?" என்று கேட்டாள். "நீ சிரிச்சாதான் என் நாள் நல்லா இருக்கு" என்றான்.


இரண்டு வருடம் ஓடியது. கதிரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. தாமரை துணை நின்றாள். கதிரின் வேலை போனது. தாமரை தைரியம் சொன்னாள். சண்டை வந்தது. ஆனால் இருவரும் பேசி தீர்த்தார்கள். விட்டு ஓடவில்லை.


திருமணம். பாட்டி தாமரைக்கு அந்த வெண்முத்தை கொடுத்தாள். "இத மாதிரி உங்க உறவு இருக்கணும். வெயில் அடிச்சாலும், புயல் அடிச்சாலும் கரையாம இருக்கணும்."


இன்று தாமரைக்கு நாற்பது வயது. கதிர் அருகில். இரண்டு பிள்ளைகள். வாழ்க்கையில் வெயில் அடித்தது, மழை பெய்தது, புயல் வீசியது. ஆனால் அவர்கள் உறவு கரையவில்லை. ஏனென்றால் அது பனித்துளி இல்லை. கடலின் ஆழத்தில் வலியோடு உருவான வெண்முத்து.


முற்றத்தில் பனித்துளி இப்போது காய்ந்து விட்டது. ஆனால் தாமரையின் கழுத்தில் இருந்த முத்து மாலை வெயிலில் இன்னும் பிரகாசமாக மின்னியது.


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)