அரசமரம் துளிர்த்தது… கடன் சுமை குறைந்ததா?.. வேரில் இருந்து விழுது வரை (7)

Su.tha Arivalagan
Nov 20, 2026,02:56 PM IST

- கவிஞர் கே. பிரியங்கா


பொன்னுவேல் டீக்கடை திறப்பதற்குத் தயாராகிவிட்டது. பல நாட்களாக மனதில் சுமந்திருந்த கனவு, இப்போது நிஜமாகப் போகிறது. பால் வழங்க சுப்பையா பிள்ளையும் தயாரானார். கடையின் திறப்பு விழாவை வெள்ளிக்கிழமை நடத்துவது என்று முடிவானது.


அந்த நாள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையின் விடியலாக இருந்தது.


திறப்பு விழாவிற்காக என் குடும்பத்தினரும், செல்லதுரை தாத்தா, துரைப்பாண்டி தாத்தா, சுப்பையா பிள்ளை தத்தா மற்றும் அம்மாபட்டி கிராமத்தினரும் தயாரானார்கள். அன்று காலை கடையைச் சுற்றிலும் ஒருவித மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் நிறைந்திருந்தது.


காலை ஒன்பது முதல் பத்து மணிக்குள் நல்ல நேரத்தில் பால் காய்ச்சுவது என்று முடிவு செய்தார்கள்.


என் பாட்டி அக்கம்மாள், கடையில் பால் காய்ச்சுவதற்குத் தயாராக இருந்தார். அதற்கு முன்பாக செல்லதுரை தாத்தா கோயிலுக்குச் சென்று பூஜை செய்துவிட்டு வந்தார். அப்போது அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார்.


“பால் காய்ச்சுவதற்கு முன்பு, நாம் கொண்டு வந்த அரசமரக் கன்றை விஜயன் கையால் நட்டு வைக்கட்டும்!”


என் அப்பா என் பாட்டிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர். என் அப்பா பெயர் காளிமுத்து (எ) விஜயன். அன்று அந்தச் சிறிய அரசமரக் கன்றை அவர் கைகளால் நட்டு வைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.


நல்ல நேரத்தில் மரக்கன்றை நட்டு, அதற்குத் தண்ணீர் ஊற்றினார்.


அப்போது அந்தக் கன்றின் எதிர்காலத்தைப் பற்றி என் அப்பாவிற்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது? அது ஒரு நாள் பெரிய மரமாக வளரும் என்பதைத் தவிர, எங்கள் குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தோடு அதற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உருவாகப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.




பின்னர் என் பாட்டி அக்கம்மாள் பால் காய்ச்சினார். கொதித்தெழுந்த பாலை அங்கு வந்த அனைவருக்கும் கொடுத்தார்கள். மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் நிறைந்த அந்தச் சிறிய நிகழ்வோடு பொன்னுவேல் டீக்கடை தனது பயணத்தைத் தொடங்கியது.


பல ஆண்டுகளாக வறுமையோடு போராடிய எங்கள் குடும்பத்திற்கு, அந்தச் சிறிய டீக்கடை ஒரு புதிய நம்பிக்கையின் அடையாளமாக அமைந்தது.


ஆரம்பத்தில் சில மாதங்கள் தொழில் சுமாராகத்தான் நடந்தது. வருமானம் பெரிய அளவில் இல்லை. இருந்தாலும் கடையைத் தொடர்ந்து நடத்தினார்கள்.


அவர்கள் நட்ட அரசமரக் கன்றும் மெல்ல மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. அந்தச் சிறிய துளிரைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். அதுபோலவே எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையிலும் புதிய துளிர் தோன்றாதா என்ற ஏக்கம் இருந்தது.


அம்மாபட்டி ஒரு சிறிய கிராமம். அங்கே கிடைக்கும் வருமானம் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கும் கடையின் செலவுகளுக்கும் சரியாக இருந்தது. பெரிய லாபம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கடை தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.


அந்த நேரத்தில் எங்கள் தொழிலுக்கு எதிர்பாராத ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் ஊருக்கு வடகிழக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் போடி மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் இருந்தது. அந்தக் கண்மாயில் களிமண் அதிகமாக இருந்தது. மேற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் விவசாயம் செழித்திருந்த சில்லமரத்துப்பட்டி கிராமம் இருந்தது.


விவசாயத் தேவைகளுக்காக அந்தப் பகுதியிலிருந்து களிமண் ஏற்றிச் செல்ல ஏராளமான மோட்டார் வண்டிகளும் மாட்டு வண்டிகளும் தினமும் எங்கள் டீக்கடை வழியாகச் சென்றன. அந்த வண்டிகளின் ஓட்டுநர்கள், சுமை ஏற்றும் தொழிலாளர்கள் எனப் பலரும் எங்கள் கடைக்கு வரத் தொடங்கினார்கள்.


காலையில் ஒரு டீ… வேலைக்கு நடுவில் இன்னொரு டீ… மாலையில் ஓய்வெடுக்கும்போது ஒரு டீ… இப்படியாக எங்கள் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.


அதுவரை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த தொழில், மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியது. வருமானமும் கணிசமாக உயர்ந்தது. என் பாட்டியின் முகத்தில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தது. பொன்னுவேலின் மனதிலும் ஒரு சிறிய நம்பிக்கை முளைத்திருக்கலாம்.


ஆனால், வருமானம் அதிகரித்துவிட்டால் வாழ்க்கையில் இருந்த எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா? எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, பதில் அவ்வளவு எளிதாக இல்லை. நாங்கள் வளர்ந்தோம்… கடன் மட்டும் குறையவில்லை!


என் அப்பாக்களும் பள்ளிக்குச் செல்லும் வயதை அடைந்தார்கள். என் அப்பா  ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். என் பெரியப்பாக்கள் மூன்றாம் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பிலும் படிக்கத் தொடங்கினார்கள்.


எங்கள் வீட்டில் குழந்தைகளின் படிப்பு தொடர்ந்தது. அரசமரம் வளர்ந்தது. டீக்கடையும் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, பொன்னுவேல் குடும்பம் மெல்ல முன்னேறிக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றியிருக்கலாம்.


ஆனால் எங்கள் வீட்டின் உள்ளே இருந்த கணக்குகள் வேறு கதையைச் சொன்னன. கடையின் வருமானம் வந்தது.


பால் வாங்குவதற்கான செலவு, டீத்தூள், சர்க்கரை, விறகு மற்றும் பிற கடைச் செலவுகள் போயின. மீதமிருந்த பணத்தில் குடும்பத்தின் உணவுத் தேவைகள், குழந்தைகளின் செலவுகள் என அனைத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது.


வருமானம் வந்தது. ஆனால் கையில் பணம் தங்கவில்லை. குடும்பச் செலவுக்கும் தொழில் செலவுக்கும் சரியாகப் போய்விட்டது. அதற்கிடையில், வீட்டிற்காக ஏற்கெனவே வாங்கியிருந்த கடனின் வட்டி மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.


வட்டியைக் கட்ட முடியாதபோது, அது அடுத்த கணக்கில் சேரும். அதன் மீது மீண்டும் வட்டி ஏறும். இப்படியே கடன் சுமை குறைவதற்குப் பதிலாகப் பெருகிக்கொண்டிருந்தது.


கடையை நடத்துவதற்காக உழைதார்கள்; குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடினார்கள். ஆனால் பழைய கடன் எங்கள் உழைப்பின் பலனை மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருந்தது.


நாங்கள் வளர்ந்துகொண்டிருந்தோம். எங்கள் அரசமரம் வளர்ந்துகொண்டிருந்தது. எங்கள் டீக்கடையின் வியாபாரமும் வளர்ந்துகொண்டிருந்தது. ஆனால் எங்கள் குடும்பத்தின் கடன் சுமையும் அதனோடு சேர்ந்து வளர்ந்துகொண்டிருந்தது!


ஒரு குடும்பத்தின் வறுமையைப் புரிந்துகொள்ள, அந்தக் குடும்பம் எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை மட்டும் பார்த்தால் போதாது. அந்த வருமானத்தில் எவ்வளவு கையில் தங்குகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.


பொன்னுவேல் பகலெல்லாம் உழைத்தார். கடையை நடத்தினார். குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றார். குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையும் அவருக்குள் இருந்திருக்கும்.





ஆனால் இரவு வந்ததும், அன்றைய வருமானத்தையும் செலவுகளையும் கணக்கிட்ட பிறகு, அவரது மனதில் ஒரே கேள்வி எழுந்திருக்கலாம்.


“இப்படியே உழைத்துக்கொண்டிருந்தால் நம்முடைய கடன் எப்போது தீரும்?”


“பிள்ளைகள் வளர வளரச் செலவும் அதிகரிக்குமே… அப்போது என்ன செய்வது?”


“இந்த வறுமையின் பிடியிலிருந்து என் குடும்பம் எப்போது விடுபடும்?”


அந்தக் கேள்விகளுக்கு அவரிடம் உடனடியான பதில் இல்லை.


உழைக்காமல் இருந்தால் குடும்பம் பசியால் தவிக்கும். உழைத்தாலும் கடன் குறையவில்லை. ஒரு பக்கம் குழந்தைகளின் எதிர்காலம்; மறுபக்கம் கடன் கொடுத்தவர்களின் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு.


இரண்டுக்கும் நடுவில் நின்று என் தாத்தா பொன்னுவேல் தவித்திருக்க வேண்டும். இப்போது நினைக்கும் போதும் அந்த நாட்களில் என் தாத்தா   சுமந்த குடும்ப வேதனையின் ஆழம் இப்போது எனக்கு புரிகிறது.


ஒரு தந்தையின் மனக்கவலை என்பது அவர் தனியாகச் சுமக்கும் பாரம் மட்டுமல்ல. அது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தையும் அமைதியாகப் பாதிக்கக்கூடியது.


அரசமரம் துளிர்த்து வளர்ந்துகொண்டிருந்தது. அந்த மரத்தைப் போலவே நாங்களும் வளர்ந்துகொண்டிருந்தோம். ஆனால் அந்த மரத்தின் வேர்களைப் போல எங்கள் குடும்பத்தின் கடனும் ஆழமாகப் பதிந்துகடன்காரனாக கொண்டிருந்தது.


அந்தக் கடன் வேர்களை அறுத்தெறிந்து, ஒருநாள் நிம்மதியாக வாழ முடியுமா? அல்லது காலம் செல்லச் செல்ல கடன் சுமை இன்னும் அதிகரித்து, எங்கள் வாழ்க்கையை மேலும் சோதிக்கப்போகிறதா?


எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் எத்தனை சோதனைகள் காத்திருக்கின்றன என்று!


(அடுத்த பகுதியில்: பொன்னுவேல் குடும்பத்தின் கடன் சுமை என்ன ஆனது? டீக்கடை வருமானம் குடும்பத்தைக் கரைசேர்த்ததா? அல்லது எதிர்பாராத புதிய சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் புரட்டிப்போட்டனவா?)


(தொடரும்)


(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)