நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
- பாவை.பு
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்றால், ஏழைகளின் முந்திரி வேர்க்கடலை. பொதுவாகவே பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பகுப்புகளில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளதாக பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் விட வேர்க்கடலையில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் தான் ஏழைகளின் முந்தரி ஆனது வேர்க்கடலை.
வேர்க்கடலையின் பூர்விகம் தென்அமெரிக்கா. உலகளவில் சீனா, இந்தியா, நைசீரியா போன்ற நாடுகள் இதனை அதிகம் பயிரிடுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை குஜராத் மாநிலத்தில் தான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இரண்டாவது ராஜஸ்தானும் மூன்றாவதாக தமிழகமும் உள்ளது.
30ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை முறையில் விளைவிக்கும் எண்ணெய் வித்துக்களான, வேர்கடலையில் இருந்து கடலை எண்ணெய், எள்ளில் இருந்து நல்லெண்ணெய், தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணெய், இலுப்பை கோட்டையிலிருந்து இலுப்பெண்ணெயும் நன்கு விளைந்தது. இதுவே அவர்களின் பயன்பாட்டிற்கு தேவையானதாகவும் இருந்தது.
ஆனால் 1990-1991 க்களுக்கு பிறகு உலகமயமாக்கல் கொள்கையாலும், பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்சியாலும் வேர்க்கடலை மீது பல தவறான கருத்துக்களை திட்டமிட்டே பரப்பியது. வேர்க்கடலை கொழுப்பை அதிகப்படுத்தும், இதயக்கோளாறு ஏற்படுத்தும், உடல் பருமனை உண்டாகும், என்றெல்லாம் அள்ளிவிட்டதின் காரணமாக இங்கு வேர்க்கடலையின் பயன்பாடும் உற்பத்தியும் குறைந்தது. மற்ற நாடுகளில் வேர்கடலையின் பங்கு அதிகரித்து.
இதனையடுத்து அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (sunflower oil) யும், பாமாயிலையும் இறக்கி கொள்ள லாபம் பார்த்தார்கள். அதுமட்டுமின்றி பாதாம் பிஸ்தா போன்ற பருப்புகளையும் நன்றாகவே இங்கு சந்தைப்படுத்தியது. மேலும் உள்நாட்டு தயாரிப்பான தாவர எண்ணெயை விட வெளிநாட்டு எண்ணெய் விலை குறைவாக இருந்ததாலும், சூரிய காந்தி எண்ணெய், கச்சா ரீஃபைண்ட் பாமாயில் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதாலும், இங்கே எண்ணெய் வித்துசாகுபடியும் குறைந்தது குறைக்கப்பட்டது.
இதனால் 80 சதவீதமாக இருந்த உற்பத்தி பெருமளவு குறைந்தது. 60 லிருந்து 70 சதவீதம் சமையல் எண்ணெயின் தேவையை இறக்குமதியையே நம்பி உள்ளது இந்தியா. இதில் அதிகளவில் விலையிலும், தரத்திலும் மலிவான பாமாயிலே இறக்குமதி செய்யப்படுகிறது, அதனை தொடர்ந்து சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளன.
இதில் பாமாயிலை மலேசியா, இந்தோனேசியாவில் இருந்தும், சோயாபீன் எண்ணெயை தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும், சூரியகாந்தி எண்ணெயை ரஷ்யா உக்ரைனில் இருந்தும் இறக்குமதி ஆகிறது. இதனால் சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே ஆண்டொன்றுக்கு 1 லட்சம் கோடி வரை செலவிடுகிறது இந்தியா. இந்நிலை மாற வேண்டும் எனில் உள்நாட்டு எண்ணெய் வித்துசாகுபடியை அதிகரிக்க செய்து, விவசாயிகளிடம் அரசே நேரடியாக எண்ணெய் வித்துக்களை வாங்கி, பொது விநியோக திட்டத்தின் கீழ் சமையல் பயன்பாட்டிற்கு தாவர எண்ணெயை வினியோகம் செய்வதன் மூலம், எண்ணெய் உற்பத்தி அதிகமாவதோடு ஆரோக்கியமான எண்ணெயை மக்கள் பயன்படுத்துவார்கள்,அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு, விலையும், எண்ணெய்வித்து சாகுபடியில் தன்னிறைவு பெறவும் முடியும்.
நமது முன்னோர்கள் பாரம்பரிய உணவு வகைகளில் நிலக்கடலை மூலம் செய்த பல்வேறு உணவு பதார்த்தங்கள் இன்று வழக்கொழிந்து விட்டது. அதில் ஒன்றுதான் நிலக்கடலை சட்னி. எவ்வளவு டேஸ்ட்டான சட்னி தெரியுமா இது.. வாங்க பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை-1கப் (வறுத்து தோல் நீக்கியது)
பட்டமிளகாய்-7
புளி-கெட்டாபாக்கு அளவு
உப்பு- தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய்
கடுகு
உளுந்து
கருவேப்பிலை
வெங்காயம்-பொடியாக நறுக்கியது சிறிதளவு
செய்முறை:
- நிலக்கடலை,பட்டமிளகாய்,புளி,உப்பு இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
- அரைத்ததை வேறொரு பாத்திரத்தில் மாற்றி, தாளிக்க வேண்டும்..
- அவ்வளவுதான் மண் மனம் மாறத வேர்கடலை சட்னி தயார்..
செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க, உங்க நாக்கு வேர்க்கடலை சட்னிக்கு அடிமையாகி விடும்.