விடியலின் கீதம்!

Su.tha Arivalagan
Jan 12, 2026,10:19 AM IST

- ந. மகாலட்சுமி


கிழக்கு வானில் கதிரவன் மெல்ல எழுந்து வந்து, 

பொன்னொளி சிந்த,

புத்தம் புதியதோர் புலரல் பிறக்க,

புவியில் உயிர்கள் புத்துணர்வு பெறுக!

பறவை இனம் தங்கள் பண்ணிசை பாட,

பூக்களும் இதழ் விரித்து புன்னகை பூக்க,

காற்றலை தவழ்ந்து வந்து கன்னம் வருட,




காலை வணக்கம் சொல்வோம், களிப்புடன் வாழ!

மறைந்த இருள் விலகி, மாசற்ற ஒளி பரவ,

மௌனம் கலைந்து, மங்கலம் பெருகிடவே!

பசுமையின் மீது பனித்துளிகள் மின்ன,

பயிர்கள் எல்லாம் நீரருந்தி செழித்து நிற்க;

விவசாயி புன்சிரிப்புடன் களமிறங்கிட,

தொழிலாளர் ஆயத்தமாகி கடமை செய்திட,

மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி தேட,

அனைவரின் முயற்சியிலும் வெற்றி வந்து சேர!

அன்றாடத் தேவைக்கான அரும்பாடுபட,

உறவுகளின் பாசத்தால் இதயம் மகிழ்ந்திட,

நேற்றைய கவலைகள் யாவும் நீங்கி மறைய,

இன்றையப் பொழுது இனிமையாய் மலர;

நம்பிக்கை எனும் விதையை நெஞ்சுக்குள் ஊன்றி,

புதியதோர் சிந்தனையில் மனதை நிரப்பி,

எதிர்கால லட்சியத்தை எட்டிப் பிடிக்க,

புத்துணர்வோடு பயணத்தைத் தொடர்வோம்!

இந்த இனிய காலைப் பொழுதைப் போல,

உங்கள் வாழ்வும் பிரகாசமாய் ஒளிரட்டும்!

எண்ணியவை ஈடேற, இன்பங்கள் பெருக,

அமைதியும் ஆரோக்கியமும் எப்போதும் நிலைக்கட்டும்,

இனியதோர் நாள் உங்களுக்கு அமையட்டும்


(ந.மகாலட்சுமி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர். இலக்கியத் துறையில் 50க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பணியாற்றுவது, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)