விடுதலை வேண்டா பசி!
- சசிகலா விஸ்வநாதன்
ராஜு, ரோஸ் நிறத்துடனும் நீளமான நீல வண்ண வாலுடன் கூடிய பட்டத்துடன் ஓடிவர, அவன் பின்னே மூச்சிறைக்க ஓடிவந்தான். அகமது. எப்படியோ விடுதியின் வளாகத்திலிருந்து காவல்கார முனியன் கண்ணில் படாமல் தப்பித்து வந்தாயிற்று.
"இன்று ஆசை தீர பட்டம் விட்டு விளையாடத்தான் வேண்டும். இங்கு வந்து நம்மை பிடிப்பவர் யாரும் வர மாட்டார்கள் " என்றான் அகமது.
" சரி ! ஆனால் வரும் அவசரத்தில் காலை உணவு சாப்பிடாமல் வந்து விட்டோம்; பசிக்கு துடா!" என்றான்; ராஜு .
"பசிக்குது" என்று நினைத்தால் தான் பசிக்கும்." என்று பெரிய மனிதன் போல் பேசினான்; அகமது.
நாள் முழுவதும் பட்டம் விட்டு விளையாடிய குழந்தைகள் ; அயர்வுடன் அருகில் இருந்த கல் திட்டின் மேல் உட்கார்ந்தார்கள். இருவருக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்றியது.
"பசங்களா! உங்களை எங்கெல்லாம் தேடுவது? சோறு தண்ணி இல்லாமல் உங்களைத் தேடி அலைகிறேன். பட்டமா, விட்டுக்கொண்டு இருக்கீங்க?" என்று முதுகில் நாலு அடி கொடுக்கவும்; பயந்த பிள்ளைகள் ஒடத் துவங்கினர்.
அவர்களிடம் முனியன்," சாமிகளா! உங்களைக் கும்பிட்டு கேட்கிறேன். என் வேலைக்கு வேட்டு வைக்காதீங்க. தயவு பண்ணி எங்கூட வந்துருங்க" என்றான்.
"அங்கு வந்தா மாஸ்டர் அடிப்பாரே! எங்களை விட்டுடுங்க; அண்ணே! " என்று அகமது பதிலுக்கு கெஞ்சவும், உங்களை அடிக்காம நான் பாத்துக்கிறேன். வளாக தோட்டத்தில்தான் தூங்கிட்டு இருந்தாங்கன்னு , சமாளிக்கறேன்." என்றதும்; அவர்களுக்கு பசி எடுத்தது.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)