ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
டில்லி : பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதியன்று விஜய்யின் ஜனநாயகன் படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர உள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி 09ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இது தொடர்பாக படக்குழுவினர் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி, படத்திற்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்டார். ஆனால் அவர் தீர்ப்பு வழங்கிய சில நிமிடங்களிலேயே இரண்டு நீதிபதிகள் அமர்வில் சென்சார் போர்டு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 09ம் தேதியன்று நடந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்சார் போர்டின் மேல்முறையீட்டிற்கு எதிராக ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் புரொடெக்ஷன்ஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 12ம் தேதியான நேற்று இந்த வழக்கு முறையாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று நடைபெற உள்ளதாக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அளித்த சம்மனுக்கு நேற்று டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரான நிலையில் அவர் ஜனவரி 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என சொல்லப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 15ம் தேதி ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.