இயற்கையின் மடியிலே!

Su.tha Arivalagan
Aug 05, 2026,03:04 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன்


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் 

இறைவா! இறைவா!!


இத்தனையும்

இயற்கை என்னும்

அன்னையின்

மடியிலே!


உதிக்கின்ற சூரியனும்,செவ்வானமும்,


குளிரை பொழியும் நிலவும்,நீல வானும்

இயற்கை தானே!


வானுயர வளர்ந்து நிழல் தரும் மரங்கள்


குடைபோல் தழைந்து நிற்கும் செடிகளும்


இயற்கையின் அழகை பேசாமல் பேசும் அழகு!




பச்சை  புல் மெத்தை விரித்த 

பசுமை பூமியின் 

கண்கொள்ளா காட்சி!


காக்கையின் கரைதல், குருவியின் கீச் கீச்,


குயில் பாட்டும்

மயிலாட்டமும் 


இயற்கையின் பரிசு அல்லவா?


மலர்களில் எத்தனை வண்ணங்கள்


எத்தனை வகைகள்

எத்தனையெத்தனை நறுமணம்


இயற்கை தந்த

இனிய வரமல்லவோ?


ஓடும் நதிகளும்

ஆடுமுயிரினங்களும்

பாடும் காடுகளும்

ஈடு இல்லா வனப்பும்


தேசுலாவும் தென்றலும்

கருவண்டாக மேகங்களும்


நிலமகள் குளிர்ந்திட

பூமி தழைத்திட

மேகங்கள்   சொரிவது மழையாக

மனிதன் சுகித்திட


பசுமை போர்வை போர்த்தி

நம்முடன் சிரித்து விளையாடும்

இயற்கையை நேசி!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)