Short Story: கோகிலா

Su.tha Arivalagan
Jul 01, 2026,04:38 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன் 


கோகிலா அன்று காலையிலேயே மிக சுறுசுறுப்பாக இருந்தவள் மனதில் சிறிதும் தடுமாற்றம் இல்லை. அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.இது அவளுடைய சுய குணம் இல்லையே!


ஒரு மேஜையில் இடித்துக் கொண்டால் கூட மேஜையை தடவி கொடுக்கும் குணமுடயவள். இத்தனை பெரிய அடியை அவளால் எப்படி கொடுக்க முடிந்தது? கொடுத்தப் பின் ஒன்றுமே நடக்காதது போல் இருக்கும் துணிவு, பழி வாங்கும் முயற்சியா?


இன்னும் சில மணி நேரங்களில் அவன் யாரோ ,அவள் யாரோ? இதை சட்டபூர்வமாக கூற நீதிமன்றம்.உள்ளத்தால் பிளவு பட்டு ஆண்டுகள் பலவாகின.இன்று முதல் தனித்து வாழ ஒரு   அனுமதி!


கடந்த ஓராண்டு காலமாக இருவரும் தனி வீடுகளில் வாழ்க்கை. இனி யாருக்காகவும்  நடிக்கத் தேவையில்லை. ஊர் என்ன சொல்லும்,சுற்றம் என்ன கதை அளக்கும் என்ற கவலையும் இல்லை.




முப்பது ஆண்டு மண வாழ்க்கைக்கு இன்று இறுதி மணி அடிக்கப் போகிறது. 


கோகிலா உயர்நீதிமன்ற வளாகத்தில் தனது இன்னோவா காரை நிறுத்திவிட்டு குடும்ப கோர்ட்டின் உள்ளே நுழைந்தாள்.காத்திருப்பு நேரம் தான்.


அவள் தான் அவனை விரும்பி விரும்பி காதலித்தாள். அவனது உள்ளத்திற்குள் இருந்த உள்ளத்தை கண்டுபிடிக்க கொஞ்சம் காலம் பிடித்தது.அவனுடைய  தோலின் வெள்ளை நிறம் அவனுள் இல்லை என்று அறிந்த பின் வேதனைப் பட்டாள்.


பிடிவாதமாக பெற்று எடுத்த இரு குழந்தைகளின் நிலைமை யோசித்தாள்.


எத்தனையோ தடவை ரமேஷை விட்டு பிரிந்து போக வேண்டும் என்று நினைத்த போதும் குழந்தைகளுக்காக எல்லாம் சகித்துக் கொண்டு இத்தனை காலம் ஓட்டி விட்டாள். இனியும் முடியாது.


அவன் அவளுடைய அத்தை மகன் தான். அவன் இன்னோர் பெண்ணை காதலிக்கிறான் என்பது அவளுக்கு தெரியாது. அவன் சொல்லவில்லை. யாரும் சொல்லவில்லை. அவளாக புரிந்து கொண்டு,அதை உறுதிப் படுத்திய போது காலம் கடந்து மன பாரம் ஏறி விட்டது.


அவன் ஏமாற்றினான் என்ற நினைப்பு அவளை சித்திரவதை செய்தது.


பெண் சுமதிக்கு திருமணம் முடிந்தது.பிள்ளை சுகுமாருக்கும் மனைவி வந்துவிட்டதும் கோகிலா தீர்மானத்துக்கு வந்தாள்.ரமேஷ் இதை எதிர்பார்க்கவிலை தான்,ஆனாலும் அவள் வழியில் குறுக்கே நிற்கவில்லை. இருவரும் ஒத்துக்கொண்டு விவாகரத்து விண்ணப்பித்து இது வரை வந்து விட்டது. நீதிமன்றம் கூடிய நிலையில் நீதிபதி இன்னும் சில நிமிஷங்களில் இருக்கையில் அமர்ந்து விடுவார்.


கோகிலா இடம் தேடி உட்கார்ந்து வாயில் பக்கம் நோக்கினாள்.


"இது என்ன,சுமதி அரக்கபரக்க வருகிறாள்"?


"அம்மா, அம்மா,அப்பா .. என்று விக்கி அழுதாள்.


"என்ன ஆச்சு சுமதி?"


"அம்மா, அப்பா ஆசுபத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார்", விக்கி அழுத வண்ணம் சுமதி பேசுகையில் தலை சுற்றி அமர்ந்தாள் கோகிலா.


மயக்கம் தெளிந்தவுடன்


,"சுமதி,எனக்கு அவரை உடனே பார்க்கணும்"பரிதவித்து மகளுடன் கணவரை காணப் புறப்பட்டாள் கோகிலா.