சிறுகதை: செல்லம் என் குழந்தை
- விஜயலக்ஷ்மி கண்ணன்
"என்னங்க, இங்கே வாங்க,யாரோ வந்திருக்காங்க, யாரு தெரியலை!"
செல்லம்மாவின் இந்த குரலைக் கேட்டு சேதுமாதவன் அவசர அவசரமாக வீட்டு முன் கூடத்தில் வந்து பார்த்தால், அவருக்கு தூக்கிவாரிப் போட்டது.வந்திருந்தது அவரது தம்பி சேதுராமன்.
"வா,வா சேது, ராஜி வரலையா? உட்கார்"என்று தம்பியின் மனைவியைப் பற்றி கேட்டு மின்விசிறியை தட்டி விட்டார்.
"செல்லம், வந்திருப்பது நம்ம சேது. உனக்கு தெரியலையா? நிஜமாவா?" மாதவன் சற்று கவலையோடு கேட்டார்.
"என்ன அண்ணா, ஏன் அண்ணி ஒரு மாதிரியா இருக்காங்க?"
கவலை சேதுவின் முகத்திலும் எட்டி பார்த்தது. செல்லம் சேதுவை பார்த்து புன்னகைத்தாள், எல்லாம் புரிந்தார்ப் போல்.
"சேது,கொஞ்ச நாளாகவே, செல்லம் மாறி மாறி பேசறா. எதுவும் சரியா நினைவு இருப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமா நினைவு மோசம் ஆகி வருகிறது.டாக்டர் வயது காரணம் என்று முதலில் சொன்னார். இப்பொழுது அல்சீமியர்சு என்று உறுதியா சொல்லிவிட்டார்”
"அண்ணா, ஏன் எனக்கு முன்னே தெரிவிக்கலை? நான் ராஜியை அழைத்துக் கொண்டு வந்திருப்பேன்! உனக்கும் உதவியா இருப்பாள்."
"அதெல்லாம் வேண்டாம் சேது. நானே அவளை கவனித்து கொள்கிறேன். எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை.தேவை வந்தா நிச்சயம் தெரிவிக்கிறேன்".
"நீ வா. கை கால் கழுவி வந்து உட்காரு. சமையல் ஆயிடுத்து. உன் அண்ணி சமையல் மாதிரி இல்லை என்றாலும் என் சமையலை நீ சாப்பிட முடியும். வயிற்றுக்கு எதுவும் ஆகாது. கியாரண்டி!"
செல்லம்மாவை சாப்பாடு மேஜை அருகே நாற்காலியில் அமர்த்திவிட்டு சேதுவின் தட்டில் பரிமாற முயன்ற மாதவன் கையை பிடித்து "நீங்களும் உட்காருங்க. நாம பரிமாறிக் கொள்ளலாம் "என்றான் சேது.
"இல்லை சேது. செல்லம் தானா சாப்பிட முடியாது. ஹெல்ப் பண்ணலை என்றால் சாப்பிடத் தெரியவில்லை."
சின்னக் குழந்தைக்கு ஊட்டுவதைப் போல் அண்ணன் ஊட்டிவிடுவதை கவனித்தவாறு தான் உண்ணாமல் மனைவி ராஜி மொபைல் நம்பரை அடித்தார்.
"ராஜி, நீ நாளைக்கே கிளம்பி பெங்களூர் வந்திடு. இங்கே அண்ணி கொஞ்சம் நலமில்லாமல் இருக்கிறார். ஒரு வாரம் தங்கற மாதிரி வா. உன்னை அழைக்க நான் ஸ்டேஷன் வர்றேன்."
"எதுக்குடா சேது, இப்ப அவளையும் கவலைப்படுத்தறே?"
"நம்ம நிமஹானஸ் போய் காட்டி வரலாம் அண்ணா.”
“அங்கே கூட்டிப் போய் டாக்டர் பாத்தாச்சு. இன்று வரைக்கும் இந்த வியாதி குணமாக வைத்தியம் இல்லை சேது. நாம அவளை கவனிச்சுண்டு ஆறுதலாய் இருக்க முடியும். அவ்வளவு தான்." என்றார் மாதவன்.
அதற்குள். செல்லமா உட்கார்ந்தபடியே உறங்கி விட்டாள். மாதவன் நாற்காலியோடு சேர்த்து நகர்த்தி படுக்கையில் கிடத்திவிட்டு கூடத்தில் தம்பியுடன் பேச்சுத் தொடர்ந்தார். "சேது! செல்லம் இப்ப என் குழந்தை. அவளை கவனித்துக் கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ஐம்பது வருட எங்கள் தாம்பத்தியத்தில் எனக்காகவே, நம் குடும்பத்துக்காகவே வாழ்ந்தவள். ஆண்டவன் அவளுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததாகவே நினைக்கிறேன்." என்று அமைதியாக சொன்னார் மாதவன்.
அண்ணனை ஒரு தெய்வமாகப் பார்த்தான் சேது.
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)