நைனா எப்ப வருவார்?
-விஜயலக்ஷ்மி கண்ணன்
"இத பாரு ரங்கா செல்வியை ஏணையிலே தூங்க போட்டு போய் வாறேன். நீ சாக்கிரதையா பாத்துக்கிடனும்.
அழுதா புட்டி பால் வெச்சிருக்கேன். குடு. டீக்கு விடும்போது வந்து பாத்திட்டு போறேன். சரியா?"என்று மகனிடம் பெரிய பாரத்தை ஏத்திவிட்டு அஞ்சுகம் என்றும் போல் இன்றும் சொல்லிக்கொண்டு அடுத்த தெருவில் புதிதாய் எழும்பி வரும் கட்டிட வேலைக்கு புறப்பட்டாள்.
"அம்மா, நைனா எப்ப வருவார்?" என்று ஒரு நாளைக்கு ஒன்பது முறையாவது கேட்கும் ரங்காவுக்கு பதில் சொல்லிப் புரிய வைக்க முடியாமல் தினமும் வெம்பி அழும் அஞ்சுகத்துக்கு தனது பத்து மாதக் குழந்தை செல்வியை பத்திரமாக பார்த்துக் கொள்ள ரங்காவைத் தவிர வேறு எவருமில்லை.
"சரி மா. நா பாத்துக்கிறேன் " என்று தைரியம் சொன்ன ரங்காவுக்கு வயது எட்டு.
செல்வி பிறக்கும் முன்பே தந்தை இறந்து விட்டான். 'அப்பனை தின்னு பொறந்த பிசாசு' என்று தான் அக்கம் பக்கம் பேசுவார்கள். ஆனால் அஞ்சுகம் ஒரு போதும் அப்படி நினைக்கவில்லை. தாய் மனம்!
ரங்கனுக்கோ செல்வி பிறந்ததிலிருந்து உலகமே அவள் தான். குழந்தை தூங்காத போதெல்லாம் அவளை மார்போடு அணைத்த வண்ணம் ஏதோ ஒரு சினிமா பாடலை முணு முணுத்துக் கொண்டே இருப்பான். செல்வியும் அவனோடு விளையாடப் பழகி விட்டாள், அம்மாவை தேடுவதில்லை.
சிணுங்கிக் கொண்டே புட்டியை பக்கத்தில் வைத்த செல்வியை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு வெளி வாசலுக்கு வேடிக்கை காட்ட வந்தான் ரங்கன். அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனுக்கும் டீ எடுத்துகிட்டு வந்திடுவா.
சற்று நேரத்தில் திடீர் என்று ஆம்புலன்சின் சத்தம் கேட்டது. குடிசையைத் தாண்டி பறந்தது. அஞ்சுகத்துடன் வேலை பார்க்கும் பாஞ்சாலம்மா பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து ரங்கனையும் செல்வியையும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஆம்புலன்சை பின் தொடர்ந்தாள்.
"பெரியம்மா, இனி அம்மா எப்போ வருவா?"
ரங்கன் கேள்வி!
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)