பயிற்சி வகுப்பு கட்.. விஷாலின் விளையாட்டுகள் 9

Su.tha Arivalagan
Apr 13, 2026,11:46 AM IST
- பா. பானுமதி

2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுப்புக்காக கொட்டாம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கல்யாண மஹாலில் பயிற்சி வகுப்பு ஆனது நடந்து கொண்டு இருந்தது.  

மண்டபம் வாசலில் விஷால் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விஷாலுக்கு இரண்டு வயது.
அவன் அம்மா விஷால் மீது ஒரு கண்ணும் பயிற்சியில் ஒரு கண்ணுமாக இருந்தார்.

பெயர்ச்சொல் ஏதோ ஒன்று முக்கியமாக சொல்ல ஒரு இரண்டு நிமிடம் அங்கு கவனித்து விட்டு பின்பு விஷாலை பார்த்தால் வாசலில் காணவில்லை. 

மெல்ல எழுந்து சென்று வாசலில் தேடினால் காணோம். விஷால் அம்மா அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதை பார்த்து உள்ள இருந்த சக ஆசிரியர் எழுந்து வந்து விசாரிக்க விஷாலைக் காணவில்லை என்று தெரிவித்தார். 





அவரும் தேடிப் பார்த்து விஷாலை காணாமல் நேரே வகுப்பறைக்குச் சென்று விஷாலை காணவில்லை. அவனுக்கு சரியாக பேசக்கூட தெரியாது. சிறிது நேரம் வகுப்பை நிறுத்துங்கள். அவர் அம்மா மிகவும் பதட்டமாக இருக்கிறார் என்று சொல்ல வகுப்பானது நிறுத்தப்பட்டது.

அப்பாடி ஆத்து ஆத்து என்ற ஆத்தலில் இருந்து  விஷாலால் தப்பித்தோம் என்று அனைவரும் வெளியே வந்து விஷாலை வீதி முழுக்க தேடினார்கள்.

அங்கு தேனீர் குடிப்பதற்காக நின்றிருந்த பேருந்துகளில் எல்லாம் ஏறி விஷாலை தேடிப் பார்க்க எங்கும் விஷாலை காணவில்லை.

வழக்கப்படி விஷாலின் அம்மா கண்ணீருடன் கரைந்து கொண்டிருக்க வகுப்பில் பார்வையாளராக வந்திருந்த உயர் அதிகாரிகள் உடனே வயர்லெஸ்சில் தகவல் கொடுத்துச் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸில் எல்லாம் தேடச் சொன்னார்கள் . பயிற்சி நிறுத்தப்பட்டு தேடும் படலம் ஆரம்பமாகிவிட்டது.

இதோ டீச்சர் இங்க வாங்க விஷால் கிடைத்து விட்டான் போலும் என்று ஓடு சென்று பார்த்தால் அங்குள்ள கடைக்காரர் 
"அம்மா பிள்ளையை பத்திரமாக வைத்துக்கொள்ள தெரியாதா. இங்க பிள்ளை பிடிப்பவர் அதிகமாயிற்றே"  

" அதிர்ஷ்டம் இருந்தால் உன் பிள்ளை கிடைத்து விடுவான் "  என்று சொல்ல இன்னும் அழுகை அதிகரித்து விட்டது 

அப்போது அந்த மண்டபத்தின் பின்புறத்தில் இருந்து இங்கு வாங்க இங்கு வாங்க என்று சத்தம் போட அங்கு சென்று பார்த்தால்,  விஷாலம்மா உடன் பணியாற்றும் ஜீவா சாரின் கையில் விஷால் இருந்தான். மெதுவாக மொட்டை மாடி ஏறி சென்றவன் வெயில் அதிகமானதால் அங்குள்ள தண்ணீர் தொட்டிக்கு அடியில் நின்று விட்டிருந்தவனை ஜீவா சார் கண்டுபிடித்து அழைத்து வந்தார் .

வேகமாக ஓடிவந்து விஷால் தன் அம்மாவின் கண்களில் வரும் கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் மெல்லத் துடைத்து விட்டான் .

நான் தானே கண்டுபிடித்தேன் எப்படி என்று ஜீவா சார் சட்டை கலரை தூக்கிக் கொள்ள, விஷாலின் மாமா நீங்க தான் உங்களுடைய செயல்பாடுகள் சிறப்பாக தான் இருக்கும் என்று விஷாலும் கூற அங்கு ஒரு சிரிப்பலயே பரவியது. 

எப்படியோ விஷாலினால் பயிற்சி வகுப்பு கட் ஆனது. 

தொடரும்

(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)