"என்னது... என் மாப்பிள்ளையைக் காணோமா?".. விஷாலின் விளையாட்டுகள் (3)

Su.tha Arivalagan
Mar 23, 2026,11:25 AM IST

- பா. பானுமதி


விஷாலும் அவனுடைய அம்மாவும் வேக வேகமாக ஓடி வந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது, சரியாகப் பேருந்தும் வந்து நின்றது.


அவசர அவசரமாகப் பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் அம்மா கவனித்தார்—கையைப் பிடித்துக் கொண்டு வந்த விஷாலைக் காணவில்லை! பதறியடித்துக் கொண்டு அவர் கீழே இறங்க முயல, அதைப் பார்த்த ஓட்டுநர், "வண்டி நிக்காதுமா, சீக்கிரம் ஏறுங்க" என்றார்.


"இல்லை அண்ணா, விஷாலைக் காணவில்லை!" என்று பதட்டத்துடன் அவர் கீழே இறங்க, "என்னது... என் மாப்பிள்ளையைக் காணோமா?" என்று பதறிய ஓட்டுநரும் வண்டியை நிறுத்திவிட்டு குதித்து இறங்கித் தேடத் தொடங்கினார். விஷாலை அன்றாடம் பார்க்கும் அங்கிருந்த மற்றவர்களும் தேடலில் இறங்கினர். நத்தம் பேருந்து நிலையம் சிறியதுதான் என்றாலும், நான்கு புறமும் தேடியும் சிறுவனைக் காணவில்லை. அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.


அப்போது சற்றுத் தொலைவில் ஓட்டுநர், விஷாலைக் கையில் அள்ளிக் கொஞ்சியபடி எதிரே வருவதைக் கண்டார். "எதிரே இருந்த தேநீர் கடையில் ஒரு பெரிய பேனரைப் பார்த்துட்டு அங்கே வேடிக்கை பார்த்துட்டு நின்னான்மா விஷால்... அதைப் பார்த்து தூக்கிட்டு வந்தேன்" என்று சிரித்தபடி சொன்னார் ஓட்டுநர்.


இதற்கிடையில் பேருந்துக்குள் இருந்து முணுமுணுப்பு கேட்டது: "வண்டியை எடுங்கப்பா... நேரமாகுது!"


உடனே ஓட்டுநர் பயணிகளைப் பார்த்து, "எனக்கு இப்ப ரொம்பத் தலைவலிக்குது. இந்தத் தலைவலியோட வண்டியை ஓட்டவா? இல்ல ஒரு டீ குடித்துவிட்டு வந்து ஓட்டவா?" என்று கேட்க, விஷால் கிடைத்த மகிழ்ச்சியில் வண்டியில் இருந்தவர்கள் அனைவரும், "பரவாயில்லை, டீ குடித்துவிட்டு வாருங்கள்" என்றனர்.




விஷாலைத் தூக்கிக் கொண்டு ஓட்டுநர் தேநீர் கடைக்குச் செல்ல, பேருந்தில் இருந்த இன்னும் சில பயணிகளும் இறங்கிச் சென்று தேநீர் அருந்தினர். தன் கடைக்கு இவ்வளவு வாடிக்கையாளர்களைக் கூட்டி வந்த விஷாலை அந்தக் கடைக்காரர் நன்றியோடு பார்த்தார்.


பேருந்து 15 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டாலும், "சரியான நேரத்தில் உங்களை இறக்கி விடுகிறேன்" என்று தன் மாப்பிள்ளை கிடைத்த சந்தோஷத்தில் ஓட்டுநர் வண்டியை வேகமாகச் செலுத்தினார்.


(தொடரும்)


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)