இளைஞர்களின் எழுச்சி நாயகன்!

Su.tha Arivalagan
Jan 12, 2026,01:36 PM IST

- எம்.கே.திருப்பதி


இந்திய

இளைஞர்களின் இதயம்

நரேந்திர தத்தன் 

பின்னாளில் ஆனான்

விவேகானந்தன் என்னும்

வித்தன்!


சிறுசிலிருந்து

சீக்கிரம் எதையும்

உள்வாங்கிக் கொள்ளும் 

உத்தமபுத்திரன்

சகத்தில் சனித்த--  இந்த

யுகத்தில் முளைத்த

சகலருக்கும் வாய்க்காது

சடுதியில் அத்திறம்!




பாரதத் தாயின் 

பண்பாட்டு பிள்ளை 

பார்முழுதும் பாரதமுகமாய் 

பறந்த கிள்ளை!


ஆசிரியர் பரமஹம்சர் 

ஆன்மீக குருவானார் 

அருள் பசிக்கு

அன்னம் ஈனும் தருவானார்! 


சர்வசமய 

சிக்காகோ மாநாடு அவனை

சிகரம் ஏற்றியது 

வரவேற்ற தமிழ்நாடு அவனை

வானளவு போற்றியது!


பிறந்தது வங்கம் 

எனினும் அவனை 

சிறந்தது என சீராட்டியது

தமிழகம் என்னும் தங்கம்!


குமரிமுனை அந்த 

குமரனை 

இமையவரை என காட்டியது

இவன்தான் இனி 

இந்திய நாட்டின் இதயமெனெ 

இளைஞர் மனதில் மாட்டியது!


காவித்துணி கட்டிய

காவியத்தலைவன் 

மேன்மையில் மேலோரை

மேவிய தலைவன்!


நெஞ்சுரம்மிக்க 

நூறு இளைஞர்களை 

நேரில் நிறுத்தினால் 

பாரில் சிறந்ததாய் 

பாரதத்தை பண்ணுவேன்!'   என


நம்பிக்கை உரையை

நன்மக்களிடம் ஊட்டினான் 

வாய் மலர்ந்தவாறே

வாழ்ந்தும் காட்டினான்!


இளைஞர்கள் மத்தியில் 

இளந்தீயேற்றிய இந்த

இமயத்தின் பிறந்தநாள்...


இந்திய இளைஞர் தினமாக 

கவனம் பெறுகிறது

மாதவனை மக்கள் மனம் 

 மனனம் செய்கிறது!


கவிராஜன் பாரதி

கப்பலோட்டிய வ உ சி 

இவர்களைப் போல் 

நரேந்திரனையும்

நடுவயதில் நமன்

கவர்ந்து போனான்

அழியா பழியை

அடைந்தவன் ஆனான்!


நமனின் செயல்    

நல்லவர்களின்

ஆக்கை அழிக்கும்

வாக்கை அழிக்குமா?

சீவனை பறிக்கும் 

சிந்தையை பறிக்குமா? 


அவன் ஆற்றிய 

ஆன்மீக அறத்தின் நீட்சியாக

விவேகானந்தா

வித்யாலயா என்னும் 

கல்விச்சாலைகளை 

காணலாம் நாட்டில்!


அவைகள் அனவரதமும் 

அறிவித்துக் கொண்டே இருக்கும்

ஆன்மீகத் தொண்டை ஏட்டில் !


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)