வெறும் பேச்சிலர் கூடாது!

Su.tha Arivalagan
Nov 13, 2026,08:37 AM IST

- ராஜஸ்ரீ


(இது பல  வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி)


எனது நண்பன் ஒருவன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்தான். நான் அவனிடம் அதன் காரணம் என்ன? என்று கேட்ட பொழுது அவன் திருமண வாழ்வில் விருப்பம் இல்லை. நான் பேச்சி லராகவே இருந்து விடப் போகிறேன் என்றான்


நான் கூறினேன்: திருமணம் என்பது சாதாரண விஷயம் இல்லை.  இல்லற வாழ்க்கை தர்மம். அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அவன் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. உடனே நான் நீ என்ன படித்திருக்கிறாய்? என்று கேட்டேன்.


அவன் பி.எஸ்.சி  என்றான். நான் பிஎஸ்சி என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவன் பேச்சிலர் ஆஃப் சயின்ஸ்   என்றான் 


நான் வெறும் பேச்சிலர் என்று சொல்லேன். ஏன்  சயின்ஸை சேர்க்கிறாய்? என்று கேட்டேன்.  


அதற்கு அவன் என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி. பேச்சிலர் என்றால் எதில்? சயின்சிலா? ஆர்ட்ஸ்சிலா? காமர்ஸ்சிலா? என்ற கேள்வி வருமே என்றான்.




அதற்கு நான் ஆக வெறும் பேச்சிலர் என்று சொன்னால் அர்த்தமாகாது. கூட ஏதாவது ஒரு படிப்பு இருக்க வேண்டும் இல்லையா? என்று கேட்டேன்.


அவன் சற்று எரிச்சலுடன்  ஆமாம்டா ஆமாம். என்ன இதெல்லாம் தெரியாத மாதிரி கேட்கிறாய்  என்றான்.


அதற்கு நான் எப்படி வெறும் பேச்சிலர் என்று கூறுவது அர்த்தமாகாதோ,  அதுபோல் தான் வாழ்க்கையிலும் வெறும் பேச்சிலராக  இருப்பதில் பயனில்லை.  கூட மனைவி சேர வேண்டும். மனைவி என்பவள் சாதாரண பெண் அல்ல. நமது வாழ்க்கையில் நமக்கு துணையாக வருபவள். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் வாழ்க்கைத் துணை. இப்பொழுது வேண்டாம் என்று விட்டு விட்டால் பிற்காலத்தில் மிகவும் அவதிப்பட வேண்டியிருக்கும்.  நன்கு சிந்தித்துப் பார் என்றேன்.


என் உபதேசம் பயனுள்ளதாயிற்று.


பிறகு சில நாட்கள் கழித்து அவன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டான்.  இப்பொழுது அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகி விட்டது..


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)