அழகும் உண்டு.. வழிபாட்டுக்கும் உகந்தது.. அது என்ன பூ.. அதுதாங்க அரளிப்பூ!

Su.tha Arivalagan
Jun 02, 2026,04:44 PM IST

- ஸ்வர்ணலட்சுமி

 

அழகிற்காகவும் வழிபாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும் அரளிப்பூ பற்றிய சிறு தகவல்கள் இதோ. இதன் நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிந்து கொள்வோம்.


அரளி (Arali)அல்லது அலரி (Nerium oleander) என்பது நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் ஒரு வகையான நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாகும். கொத்து கொத்தாக பூக்கும் அரளிப்பூ  மலர்மாலைகளை கோவில்களில் தெய்வ உருவங்களுக்கு சாற்றி வழிபாடுகள் செய்வது வழக்கம். இம்மலரை சிவபெருமான் திருச்சடையில் சூடி இருப்பதாக திருஞானசம்பந்தர் தனது பாடலில் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


வகைகள்:

 

1.செவ்வரளி- இதில் இரண்டு வகைகள் உள்ளன.அடர்ந்த சிவப்பு நிறம் மற்றும் பிங்க் நிறம் கலந்த சிவப்பு நிறம்.

2.வெள்ளரளி- வெள்ளை நிறம்.

3.மஞ்சளரளி - மஞ்சள் நிறம்.


அரளிச்செடி இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. எல்லா கால நிலையிலும் வளரும் இந்த செடி பெரும்பாலும் கோவில்களிலும், பூந்தோட்டங்களிலும், சாலைகளின் நடுவிலும் காணப்படுகிறது.


பூஜைகளில் அரளி பூவின் முக்கியத்துவம் :




அரளிப்பூ அஷ்ட புஷ்பங்களில் ஒன்று என்று போற்றப்படுகிறது. இறைவனுக்கு எட்டு வகையான மந்திரங்களை சொல்லி எட்டு மலர்களை, திருமேனியில் எட்டு இடங்களில் சூட்டி வழிபடுவது 'அஷ்ட புஷ்பார்ச்சனை ' என்று கூறப்படுகிறது.


செவ்வரளி மலர்கள் சிவபெருமானுக்கும், துர்க்கை அம்மனுக்கும், முருகப் பெருமானுக்கும் அரளி பூ மாலை  சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது சர்வ சித்திகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


இந்தப் பூக்கள் கடவுளுக்கு மாலைகள் கட்டுவதற்கும், புஷ்பாபிஷேகத்திற்கும் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

தல மரம்: திருக்கள்ளில் மற்றும் திருக்கரவீரம் போன்ற சில பாடல் பெற்ற சிவன் கோவில்களில் அரளிமரம் தல மரமாக உள்ளது.


விவசாயம்:


அரளி பூக்கள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான பூக்கும் தன்மையை கொண்டிருப்பதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இது ஒரு நல்ல வருமானம் தரும் பூச்சாகுபடியாகவும் மேற்கொள்ளப்படுகிறது.


நச்சுத்தன்மை:


அரளிச் செடியின் அனைத்து பாகங்களும் பூ இலை வேர் விதை நச்சுத்தன்மை வாய்ந்தவை. குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் உள்ள வீடுகளில் அரளிச்செடி அருகில் அவர்களை விடாமல் தடுப்பது நல்லது. அரளிப்பூவை கையாண்ட பிறகு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அரளி பூக்களை தொடுவதையோ, முகர்வதையோ தவிர்ப்பது பாதுகாப்பானது.


பூஜைகளில் நைவேத்தியத்திற்கு (பொங்கல்,சுண்டல்….. ) மேல் அரளி பூவை வைப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அது மிகவும் ஆபத்தானது. அதற்கு பதிலாக துளசி இலைகள் வைப்பது சிறப்பு.


அரளிச்செடியில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.ஆனால்  நெடுஞ்சாலைகளின்  நடுவில் அரளிப்பூக்கள் இருப்பது ஏன் என்று எப்போதாவது  சிந்தித்து உள்ளீர்களா? இதனைப் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். அறியாதவர்களுக்கு இந்த விளக்கம்...


நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் போது பச்சை பசேல் என்று செடிகள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும் அரளி பூக்கள்  வழிநெடுக இருப்பதை பார்த்திருக்கலாம். செவ்வரளி செடிகள் நெடுஞ்சாலைகளில் வைப்பதற்கு பல விஞ்ஞான காரணங்கள் உள்ளன.


காற்று மாசுபாடு:


தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் செல்வதால் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்.வாகனங்களால் ஏற்படும் புகை நச்சு, கார்பன் மாசுக்கள் போன்றவை காற்றை அசுத்தமாக்குவதுடன் சாலையில் பயணிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அரளிச்செடிகளின் இலைகள் மற்றும் மலர்கள் காற்றின் மாசுகளை,கார்பன் துகள்களை காற்றில் இருந்து நீக்கி,காற்றை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை.அதனால் காற்று மாசுக்கள் நீக்கிய சுத்தமான காற்றை சாலைகளில் பயணிப்பவர்கள் சுவாசிக்க முடிகிறது.


அரளிச் செடியின் வேர்கள் மண் அரிப்பை தடுக்கும்.


அரளி பூவில் இத்தனை விஷயங்களா!..அறிந்து கொண்டீர்கள் அல்லவா! பிரெண்ட்ஸ்..


மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் சுவர்ணலக்ஷ்மி பாலசுப்ரமணி.