Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

Su.tha Arivalagan
May 20, 2026,06:26 PM IST

"எனக்கு இம்போஸ்டர் சின்ட்ரோம் இருந்தது. அதை சரியாக உணர்ந்து கொண்டவர் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். அவர்தான் அதை எனக்கு உணர்த்திப் புரிய வைத்து சரி செய்து எனது கெரியரை பிரகாசிக்கச் செய்தவர்.


“இப்ப நான் நெட்ஸில் பயிற்சி எடுக்கச் சென்றால், அங்கே இருக்கும் இளம் வீரர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது நான் சரியாக விளையாடவில்லை என்றால், ‘இவர்தானா 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடுபவர்?’ என்று அவர்கள் நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். நாமே நமக்காக வைத்திருக்கும் தரத்திற்கு ஏற்ற மாதிரி தொடர்ந்து விளையாட வேண்டும். அதை டிராவிட் நன்றாக புரிந்துகொண்டார்.. அதை சரி செய்ய உதவினார் என்று முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


விராட் கோலி சொன்ன .. Imposter Syndrome என்றால் என்ன?


Imposter Syndrome என்றால், ஒருவர் எவ்வளவு நல்ல திறமையுடன் இருந்தாலும், எவ்வளவு சாதித்திருந்தாலும் கூட, “நான் இதற்கு தகுதியானவன் இல்லை”, “எனக்கு உண்மையில் அவ்வளவு தெரியாது”, “ஒருநாள் எல்லோருக்கும் நான் சாதாரண மனிதன் என்று தெரிந்துவிடும்” என்று மனதளவில் பயப்படுவது. ரொம்ப சிம்பிளான சொல்லனும்னா.. தனது திறமை என்னவென்று அறியாமல் தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுவது. நிறையப் பேருக்கு இந்தப் பிரச்சினை உண்டு.


நீ யார்னு உனக்கே தெரியலையேடா என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.. அதுதான் இது.


வெளியிலிருந்து பார்க்கும்போது அவர்கள் மிகவும் தைரியமாகவும் திறமையாகவும் இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் மட்டும் தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.. எதிலுமே அவர்களுக்கு நம்பிக்கை வராது.. இது சரியா சரியா என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள்.




ஒருவர் பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கலாம், நல்ல வேலை கிடைத்திருக்கலாம், பலரும் அவரைப் பாராட்டியிருக்கலாம். ஆனாலும் அவருடைய மனம் மட்டும் “இது என் உழைப்பால் கிடைத்தது இல்லை… அதிர்ஷ்டம் தான்…” என்று சொல்லிக் கொண்டே இருக்கும். இதுதான் Imposter Syndrome. அதாவது அவரது கடுமையான உழைப்பு, புத்திசாலித்தனத்தால்தான் அது நடந்திருக்கும்.. ஆனால் அவர்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். 


இது மாணவர்கள், வேலைக்கு செல்லும்வர்கள், பெண்கள், அம்மாக்கள், புதிய வேலையில் சேர்ந்தவர்கள் என யாருக்குமே வரலாம். குறிப்பாக எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என்று அதிகமாக யோசிப்பவர்களுக்கு இது அதிகமாக இருக்கும். எப்போதும் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கமும் இதற்கு ஒரு காரணம்.


இப்படிப்பட்டவர்கள் யாராவது பாராட்டினால் கூட அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை” என்று தள்ளிவிடுவார்கள். சிறிய தவறும் பெரிய தோல்வி போல மனதில் தோன்றும். “நான் அந்த அளவுக்கு பெரியவன் இல்லை” என்ற எண்ணம் அடிக்கடி வரும்.


ஆனால் உண்மையில் இது ஒரு மன உணர்வு மட்டுமே. அது உண்மை அல்ல. எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. தவறு செய்வதும் சாதாரணம் தான். நம்மால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து கொண்டே இருப்பதே முக்கியம். மற்றவர்களைப் போல ஆக வேண்டும் என்பதற்குப் பதிலாக, நம்முடைய பயணத்தை நாமே மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


Imposter Syndrome வந்தால், நீங்கள் திறமையற்றவர் என்று அர்த்தமில்லை. மாறாக, நீங்கள் உங்கள் செயலைப் பற்றி பொறுப்புடன் யோசிக்கும் மனிதர் என்பதற்கான ஒரு அறிகுறி கூட ஆகலாம். அதனால் தங்களை குறைத்து நினைக்காமல், “நானும் கற்றுக்கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறேன்” என்று மனதை நம்ப வைப்பது மிகவும் முக்கியம்.


நாம் பிறரை மதிப்பதற்கு முன்பு முதலில் நம்மை நமது திறமையை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது நடந்தாலும் அது உண்மையில் நம்மால் நடந்தது என்றால் அதற்காகப் பெருமைப்பட வேண்டும். அதைத் தொடர முயற்சிக்க வேண்டும். மாறாக அது  நல்ல நேரத்தால் நடந்தது, அதிர்ஷ்டத்தால் நடந்தது என்று விலகிச் செல்ல முயலக் கூடாது.


உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.. என்ற பாடல் வரிகள் இந்த இம்போஸ்டர் சின்ட்ரோம் உள்ளவர்களுக்காகவே எழுதப்பட்ட வரி போலவே தோன்றுகிறது. உண்மைதானே.. நம்மை, நம்முடைய திறமையை நாம் அறிந்து கொண்டால் அதன் பிறகு உயர்வு மட்டுமே நமக்கு நடக்கும்.. உங்களுக்கும் இதுபோல பிரச்சினை இருந்தால் முதலில் அதிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.. பிறகு பாருங்கள்.. நீங்கள் எப்படி சாதிக்கிறீர்கள் என்று.