காக்காப்பிடி கணுப்பிடி.. உடன் பிறந்தாரின் நன்மைக்காக இருக்கும் நோன்பு!
மாட்டுப்பொங்கலன்று கணுப்பிடி வைப்பது ஒருசில சமுதாயத்தினரிடம் பழக்கத்தில் உள்ளது. உடன்பிறந்த சகோதரர்கள் நலமாக வாழ சகோதரிகள் வைப்பது தான் கணுப்பிடி அதாவது நோன்பு.
மாட்டுப்பொங்கலன்று வீட்டின் வெளியிலோ , மாடியிலோ கோலமிட்டு மஞ்சள் இலை வைத்து நான்கு வகை சோறுவகைகளை உருண்டைகளாக உருட்டி வைத்து , கரும்பு துண்டு ,இலந்தை பழம் வைத்து, மஞ்சள் கிழங்கை மூத்த பெண் எவரேனும் ஒருவர் இளம்பெண்களுக்கு தேய்த்து விட , பெற்ற வீட்டின் பெருமை காக்கும் வண்ணம் பெண்கள் இருத்தல் வேண்டும், உடன்பிறந்தவர்கள் நலமாக வாழ வேண்டும் , வண்ண உணவு வகைகளை காக்கைகளை அழைத்து உண்ணுவதாக ஒரு பழக்கமுண்டு.
சரி ஏன் காக்கைகளை அழைக்கிறோம் தெரியுமா.. காக்கைக்கூட்டம் போல தன் குடும்பம் எப்போதும் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம். அதனால்தான் காக்கைகளை அழைத்து உணவிடுகிறோம்.
அன்றைய தினமோ, முன்னதாகவோ சகோதரர்கள் தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு புடவையோ, பணமோ நன்றி செலுத்தும் வகையாகக் கொடுப்பர். எத்தனை அழகான பாரம்பரிய வழக்கம்.
உறவுகளின் பாலமாக எத்தனையோ பண்டிகைகள் நாம் கொண்டாடி வருகிறோம். என் உடன் பிறந்த ,உடன் பிறவா அனைத்து சகோதரர்களும் நலமாக வாழ இந்த கணுப்பிடி நாளில் வேண்டிக் கொள்கிறேன்.
படம் உதவி: Bhavani's Home Tips"/Instagram
(இரா.காயத்ரி, பட்டதாரி ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)