நம்பிக்கை என்பது யாதெனில்....!

Su.tha Arivalagan
Apr 15, 2026,12:27 PM IST

- அ.வென்சி ராஜ்


சூரியன் மறையும் ஒரு அழகிய மாலை நேரம் கவிதா பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் அவளது மகன் கவின்  சதுரங்க வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லத் தயாராக இருந்தான். கவிதாவின் இரு சக்கர வாகனம் வந்து நின்றதும் கவின் ஓடிவந்து அம்மா எனக் கூறிக்கொண்டே வாகனத்தில் ஏறிக் கொண்டான்.  தன் இரு கைகளால் தன் தாயின் வயிற்றை  இறுகப்பற்றிக் கொண்டான்.  வாகனம் சாலையில் சத்தம் இன்றி பயணித்தது...


அப்பொழுது சாலையோரம் இருந்த தள்ளு வண்டியில் ஜாதி மல்லி பூச்சரம் இருப்பதை பார்த்தாள். உடனே கவிதா அந்த தள்ளுவண்டிக்கு அருகில் சென்று தன் கால்களை ஊன்றி வண்டியை நிறுத்தினாள். மலர்ந்தும் மலராத பாதி மலராக கட்டி வைத்திருந்த ஜாதி முல்லையைக் கண்டதும் இவள் கண்கள் அழகாய் சிரித்தன.. அதனை விற்றுக் கொண்டிருந்த அந்த வயதானவர் "என்ன பூ வேண்டும் அம்மா? " எனக்கேட்க , கவிதா ஜாதிமல்லியை  நோக்கி கைகளை நீட்டி "அதில் ஒரு முழம் கொடுங்கள்"  எனக்  கேட்டாள். 


 அந்த வியாபாரியும் "முழம்  50 ரூபாய் அம்மா"  எனக் கூறிக்கொண்டே பூச்சரத்தை தன் கைகளில் முழம் அளவிற்கு அளந்து இன்னும் சற்று அதிகமாகவே வைத்து அதனை வெட்டி இலையில் மடித்து கட்டினார்.  உடனே கவிதா "ஜிபே இருக்காங்க ஐயா?"  எனக்  கேட்டாள்.  அதற்கு அந்த  முதியவர் ஆட்டோ தேவைக்கு அழைக்கவும் என இருந்த விளம்பர அட்டையில்   அடியில் உள்ள எண்ணைக்  காட்டினார்.  உடனே கவிதாவும் அந்த எண்ணை தன்னுடைய கைப்பேசியில் போட்டு ஜிபேயிலிருந்து 50 ரூபாய் பணம் அனுப்பினாள். ஆனால் பணம் சென்று விட்டதாக இவளுக்கு டிக் வந்ததே தவிர அந்த கடைக்காரரின் கடையில் எந்த சத்தமும் வரவில்லை.




உடனே கவிதா " ஐயா அனுப்பிவிட்டேன்.  நீங்கள் வந்துவிட்டதா  என பார்த்துக் கொள்ளுங்கள்"  எனக்  கூறினார் . அவர் உடனே "அம்மா, போட்டீங்க இல்ல..  அதெல்லாம்  வந்திருக்கும் அம்மா"   அப்படின்னு சொன்னார்.  உடனே கவிதா "ஏன் ஐயா……? கைபேசி உங்கள் கையில் இல்லையா ?" எனக கேட்டாள்.  "இல்லமா வீட்ல இருக்கு" என அவர் பதில் கூறினார் . உடனே கவிதா "ஏறியிருக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"  அப்படின்னு கேட்க,  உடனே அந்த முதியவர் சற்று கூட சிந்திக்காது, "எல்லாம் நம்பிக்கை தான்மா... நல்லா இருக்குன்னு என்னை நம்பி வந்து  பூ வாங்குறீங்க.  நீங்க பணம் கொடுப்பீங்கன்னு நம்பி நானும் கொடுக்கிறேன். மகிழ்ச்சியா போயிட்டு வாங்கம்மா"  என்று பதில் சொன்னார். கவிதாவின் கன்னத்தில் யாரோ அறைந்தது போல் இருந்தது.  நம்பிக்கைக்கு எப்படி ஒரு அழகான  விளக்கம்.  


எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு மனிதனை பார்த்து. இப்படியாக  சிந்தித்துக்  கொண்டே தன் மகனுக்கு நம்பிக்கைப் பற்றி எடுத்துக் கூறிக்கொண்டு வீடு திரும்பினாள். 


 அதாகப்பட்டது நம்பிக்கை என்பது யாதெனில் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோமோ, அதை அப்படியே நாம்  பிறரிடம் நடந்து கொள்வது.....!


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)