மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
சென்னை : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளால் திமுக லாபமடைந்துள்ளதா அல்லது இழப்பை சந்தித்துள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தவெக.,விற்கு எதிராக அமையும் என பலரும் கணித்தனர். இதனால் இதை வைத்தே அடுத்தடுத்த தேர்தல்களிலும் தவெக.,வை வீழ்த்தி விடலாம், ஒரு வேளை ஆதரவு கட்சிகள் வாபஸ் பெற்றால் தவெக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் திட்டமிட்டன. ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கி, தவெக மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலால் அதிமுக தனது இரண்டு எம்எல்ஏ.,க்களை இழந்துள்ளது. தவெக.,விற்கு சட்டசபையில் இரண்டு எம்எல்ஏ.,க்களின் பலம் அதிகரித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான திமுக.,வும் ஓரளவு பலனை அடைந்துள்ளது.
இந்த இரண்டு தொகுதி இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதனால் திமுக.,விற்கு எதுவும் கிடைக்க போவதில்லை என்றாலும், இந்த தேர்தலில் திமுக தனித்து வேட்பாளர்களை நிறுத்தியதுடன், தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டது. தவெக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி, மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது. இருந்தும் திமுக வெற்றி பெறவில்லையே என பலர் நினைக்கலாம். வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த தொகுதிகளில் திமுக தனது ஓட்டு சதவீதத்தை அதிகரித்துள்ளது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
தமிழக சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே திமுக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே திமுக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அதோடு அந்த கட்சியின் ஓட்டு சதவீதமும் அதிகரித்துள்ளது. தாராபுரத்தில் 3வது இடம் பிடித்த அதிமுக வேட்பாளருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையே 10,000 ஓட்டுக்கள் வித்தியாசம் உள்ளது. மதுராந்தகம் தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக 4000 ஓட்டுக்களை திமுக வேட்பாளர் பரந்தாமன் பெற்றுள்ளார்.
கடந்த முறை பெரும் படை பட்டாளத்துடன் திமுக கூட்டணியாக இந்தத் தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்த முறை தனித்தே போட்டியிட்டது. அப்படிப் போட்டியிட்டும் கூட அதன் வாக்கு வங்கி பெரிய அளவில் சரிவைச் சந்திக்கவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணியாக இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்த முறை இரு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 2500 வாக்குகள்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் அதிமுக பெற வேண்டிய ஓட்டுக்களில் ஒரு பகுதி திமுக மற்றும் தவெக.,விற்கு சென்றுள்ளது உறுதியாகி உள்ளது. கடந்த தேர்தலை விட இடைத்தேர்தலில் திமுக.,வின் ஓட்டு வங்கி சதவீதம் அதிகரித்துள்ளது அந்த கட்சிக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதாவது திமுக இன்னும் சரியவில்லை. வலுவாக உள்ளதையே இந்தத் தேர்தல் முடிவு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே வரும் நாட்களில் இந்த வலுவை உடைக்க தவெக மேலும் வேகமாக செயல்படக் கூடும்.