திராவிட மாடலுக்கு இது தோல்வியா?.. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்...சொல்வது என்ன?

Su.tha Arivalagan
May 04, 2026,01:02 PM IST

சென்னை : யாரும் எதிர்பாராத விதமாக தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது அதிமுக.,வா? திமுக.,வா? என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராத விதமான விஜய்யின் தவெக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 


தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னும் சொற்பமான இடங்கள் மட்டுமே தேவை.


ஆளும் கட்சியான திமுக.,வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், மா.சுப்ரமணியம் உள்ளிட்ட பல அமைச்சர்களும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். யாரும் எதிர்பாராத விதமா திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தவெக இந்த தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்பட்ட நிலையில், ஆட்சியையே பிடிக்கும் அளவிற்கு சென்றுள்ளது யாருமே எதிர்பாராத ஒன்று. 


தமிழக மக்கள் அளித்துள்ளது இந்த தீர்ப்பு எதை காட்டுகிறது? 




1. ஆளும் திமுக மீதான அதிருப்தி

2. அதிமுக-திமுக ஆகிய திராவிட கட்சிகளை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளது

3. மக்கள் மாற்றத்தை விரும்புவது

4. விஜய் தனது பிரச்சாரத்தில் முன் வைத்த உங்க விஜய், உங்க அண்ணன், மாமா என்ற சென்டிமென்ட் எடுபட்டுள்ளது.

5. அரசியல் ஜாம்பவான்களை விட புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மக்களின் மனம் நினைத்துள்ளது.


அரசியல் கட்சிகளை பொறுத்தவரை பழம்பெரும் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தவெக.,வையும், விஜய்யின் செல்வாக்கையும் குறைத்து எடை போட்டு விட்டதும் கூட மக்கள் அளித்த இந்த தீர்ப்பிற்கு காரணம் என சொல்லலாம். அது மட்டுமின்றி கரூர் விவகாரத்தில் விஜய்க்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், விஜய்யின் பிரச்சாரம் உள்ளிட்டவற்றிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தடைகள், விஜய்க்கு எதிராக திமுக அரசின் நடவடிக்கைகளும் இந்த தீர்ப்பிற்கு காரணமாக சொல்லலாம். விஜய்க்கு எதிரான இந்த முடக்கும் நடவடிக்கைகள் ஆளும் கட்சி மீது அதிருப்தியையும், விஜய் மீது அனுதாபத்தையும் ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு அதிகம்.


திமுக அரசை விமர்சித்து விஜய் முன் வைத்த கேள்விகள், விமர்சனங்கள் ஆகியவை ஒரு அரசியல் தலைவராக இல்லாமல் சாமானிய மக்களின் கேள்வியாக, மக்களின் மனதில் எதிரொலியாக இருந்ததாக மக்கள் மனங்களில் ஏற்படுத்திய மாற்றங்களும், இலவச அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட மாட்டோம் என வெளிப்படை தன்மையுடன் விஜய் பேசியதும் கூட மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சொல்லலாம்.


இதைத் திராவிட மாடலுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. காரணம், மக்கள் திமுகவைத்தான் நிராகரித்துள்ளனர். அதிமுகவை, திமுகவை விட கூடுதலான இடங்களில் வெல்ல வைக்கின்றனர். எனவே இதை திராவிட மாடலுக்குக் கிடைத்த பின்னடைவு என்பதை விட திமுக, அதிமுகவுக்குக் கிடைத்த பாடம் என்று சொல்லலாம்.