திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
சென்னை: ஒரு பக்கம் திமுக சரமாரி தாக்கி வருகிறது. மறுபக்கம் ஏகப்பட்ட பிரச்சினைகள்.. இன்னொரு பக்கமோ, தேசிய ஜனநாயகக் கூட்டணி வா வா என்று வற்புறுத்தி வருகிறது.. இடையில் சிக்கியுள்ள விஜய் என்ன செய்யப் போகிறார்.. பெரும் பரபரப்பாகி மாறி வருகிறது தவெகவின் அரசியல்.
கரூர் சம்பவ விவகாரத்தில் இதற்கு விஜய் தான் காரணம் என திமுக மிகத் தீவிரமாக குற்றம்சாட்டி படு தீவிரமாக கள அரசியலில் இறங்கியது. ஆனால், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் விஜய்க்கு ஆதரவாக அதிமுக களத்தில் குதித்தது.
கரூர் சம்பவத்திற்குப் பின்னால் திமுக.,வின் சதி உள்ளது, இதற்கு விஜய்யை மட்டும் பொறுப்பாக்க கூடாது என இந்த விவகாரத்தையே திசை திருப்பியது அதிமுக. பாஜக.,வும் கூட விஜய்க்கு சாதகமாகவே அப்போது பேசியது. அண்ணாமலை மிக மிக விரிவாக விஜய்க்கு சப்போர்ட் செய்து பேட்டியும் கொடுத்தார். விஜய்க்கு ஆதரவாக எம்.பி., குழுவும் தமிழகம் வந்து பேசியது. அந்த சூட்டோடு சூடாக விஜய்யை என்டிஏ.,வில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்தது. எப்படியும் விஜய் என்டிஏ கூட்டணிக்கு வந்து விடுவார் என அதிமுக, பாஜக இரு கட்சிகளும் நம்பின.
ஆனால் விஜய் வேறு மாதிரியான கணக்கு போட ஆரம்பித்தார். அதிமுகவும் வேண்டாம்.. பாஜகவும் வேண்டாம்.. இரண்டு பேரையும் விலக்கி விட்டு, திமுகவுடன் உறவாடிக் கொண்டிருந்த காங்கிரஸ் பக்கம் கண்ணைத் திருப்பினார். காங்கிரஸும் பதிலுக்குப் பார்த்து சிரித்தது. இருவருக்கு இடையேயும் புரிதல் ஒன்று புலப்பட திமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக காங்கிரஸ் எப்படியும் தவெக பக்கம் வந்து விடும் என்ற அதீத நம்பிக்கை காரணமாக என்டிஏ., அளித்த ஆஃபர்களை விஜய் தொடர்ந்து நிராகரித்து வந்தார்.
இப்படியே போனால் விஜய் சரிப்பட்டு வர மாட்டார் என்று நினைத்த டெல்லி, வேறு மார்க்கமாக விஜய்யை டீல் செய்ய ஆரம்பித்தது. கரூர் சம்பவ வழக்கில் விஜய்க்கு அனுப்பப்பட்ட சிபிஐ சம்மன், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் ஆகியன கூட்டணிக்கு வரவழைப்பதற்காக பாஜக செய்யும் உத்திகளாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் இதையே கூறி வருகின்றன. ஆனால் அதை பாஜக திட்டவட்டமாக மறுத்தது.
கடைசி நிமிடம் வரை காங்கிரஸ் எப்படியும் தங்கள் கூட்டணிக்கு வந்து விடும். காங்கிரஸ் வந்து விட்டால் சிறிய கட்சிகள் பலரும் தங்கள் கூட்டணிக்கு வந்து விடும். இதனால் தங்கள் தலைமையில் பலமான கூட்டணி அமைத்து திமுக.,வை வீழ்த்தி, அதிமுக.,வை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, ஆட்சியை பிடித்து விடலாம் என தவெக.,வினர் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் தவெக.,வின் கனவுகளை தவிடு பொடியாக்கி, திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டு விட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வருகிறார் விஜய்.
கரூர் சம்பவ வழக்கு ஒரு பக்கம், ஜனநாயகன் பட சிக்கல் ஒரு பக்கம், மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு ஒரு பக்கம், நடிகையுடனான உறவு குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் என விஜய் கடுமையான சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், தேர்தல் வேறு நெருங்குவதால் கடைசி முயற்சியாக விஜய்யை என்டிஏ கூட்டணிக்குள் இழுக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாம்.
இந்த வேலையை பவன் கல்யாண் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. தனிக்கட்சி துவங்கி, தனித்து போட்டி என அரசியலுக்கு வந்து தான் பட்ட கஷ்டங்களையும் அனுபவத்தையும், எடுத்துச் சொல்லி, தற்போதைய அரசியல் நிலவரத்தையும் விஜய்க்கு புரிய வைத்து, என்டிஏ கூட்டணியில் இணைய வைக்க அவர் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரை பவன் கல்யாண் நடத்திய பேச்சுவார்த்தையில் விஜய்யிடம் மன மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தன்னைச் சுற்றி நிற்கும் பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இது உதவும். தனது அரசியல் இருப்பையும் இதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும். திமுகவுக்கு மாற்றான இடத்தைப் பிடித்த பிறகு தனது பாணி அரசியலை கையில் எடுக்கலாமா என்ற யோசனையில் விஜய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவுமே உறுதியாக தெரியவில்ல. எல்லாமே ஊகங்களாகத்தான் வந்து கொண்டுள்ளன.
என்ன நடக்கும் என்பதை போகப் போகத்தான் பார்க்க முடியும்.