சென்னை: தவெக தலைவர் விஜய்யும் அவரது கட்சியும் கடும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க மிகத் தீவிரமாக பேச்சுக்கள் நடந்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விஜய்யின் நீண்ட கால நண்பரும், தற்போது ஆந்திர மாநில துணை முதல்வராக இருந்து வருபவருமான பவன் கல்யாணே நேரடியாக விஜய்யுடன் தீவிரமாக பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். தற்போது வரை விஜய் மற்றும் பவன் கல்யாண் இடையே நேரடி கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால், சில அரசியல் நகர்வுகள் சந்தேகத்தை கிளப்புகின்றன.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பிதான் பவன் கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்து பெரும் தோல்வியைத் தழுவிய நிலையில் பவன் கல்யாணும் அரசியலுக்கு வந்தார். ஆனால் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டதால் அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்.
பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சியைத் தொடங்கி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். விஜய்யும் அதே போன்ற ஒரு சினிமா டூ அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளதால், இயற்கையாகவே பவன் கல்யாணின் ஆலோசனையை விஜய் பெற்று வருவதாக ஒரு தகவல் உள்ளது.

குறிப்பாக விஜய் கட்சி தொடங்கியதுமே, அவரை பாஜக கூட்டணிக்கு வருமாறு பவன் கல்யாண் அறிவுறுத்தியதாக சொல்கிறார்கள். காரணம், பாஜக தேசிய அளவில் பலமுடன் திகழ்வதால் விஜய்யின் அரசியலுக்கு அது பலம் சேர்க்கும் என்பது பவன் கல்யாணின் வாதமாக உள்ளது. ஆனால் அதை இப்போது வரை விஜய் ஏற்காமல் இருக்கிறாராம்.
அதேசமயம், பவன் கல்யாண் தனது முயற்சிகளைக் கைவிடவில்லையாம். தொடர்ந்து அவ்வப்போது பேசி வருகிறாராம். தற்போது தமிழ்நாட்டில் தவெகவுக்கு கூட்டணி அமையாமல் போய் விட்டது. பல்வேறு பிரச்சினைகளும் விஜய்யைச் சுற்றி நிற்கின்றன. விவாகரத்து விவகாரம், கரூர் விவகாரம், கூட்டணிக்குக் கட்சிகள் இல்லாதது என பல பிரச்சினைகள், குழப்பங்களில் விஜய் சிக்கித் தவிக்கிறார். இந்த நிலையில் பவன் கல்யாண் மீண்டும் விஜய்யுடன் தீவிரமாக பேச ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள்.
சரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புண்டா? தற்போதைய சூழலில் இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. நிறைய காரணங்கள் அதற்கு உள்ளன.
விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தனித்துப்போட்டி என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார். அப்டியே கூட்டணி வைத்தாலும் தனது தலைமையில்தான் என்பதையும் அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். ஆரம்பத்திலேயே ஒரு பெரிய கூட்டணியில் இணைந்தால், அது அவரது கட்சியின் தனித்துவத்தைப் பாதிக்கும் என்று விஜய் தரப்பு கருதுகிறது.
ஆரம்பத்திலிருந்தே திமுக, அதிமுக, பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவை பாசிச பாஜக என்றும் விமர்சித்துள்ளார். கொள்கை எதிரியாகவும் அதைக் கூறியுள்ளார். அதிமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படி கடுமையாக விமர்சித்து விட்டு, பாஜக-வுடன் இணைவது சிறுபான்மையினர் மற்றும் திராவிட ஆதரவு வாக்குகளைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
விஜய் தனது விக்கிரவாண்டி மாநாட்டு உரையில் பாஜக-வை பிளவுவாத அரசியல் செய்கிறது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்தார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல அதிமுகவை வளர்த்த எம்ஜிஆர், ஜெயலலிதாவை தற்போதைய அதிமுக தலைவர்கள் மறந்து விட்டனர் என்றும் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்ற ஒரு வாதம் உண்டு. கடந்த காலங்களில் பாஜக-வை கடுமையாக விமர்சித்த நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் இன்று அதே கூட்டணியில் உள்ளனர். எனவே, தேர்தல் நேரத்துத் தேவையைப் பொறுத்து மாற்றங்கள் நிகழலாம். விஜய்யும் பாஜக-வை விமர்சித்தாலும், கூட பேசுவோர் பேசினால், நெருக்கடிகளிலிருந்து விடுபட கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. அந்த வேலையைத்தான் பவன் கல்யாண் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
விஜய் நெருக்கடிகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடி பணிவாரா அல்லது தைரியமாக தனித்து நிற்கும் முடிவுக்கு வருவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கரூர் விவகாரம் தொடர்பாக விஜய் நாளை நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல ஜனநாயகன் படத்தைப் பார்க்கும் முடிவை சென்சார் போர்டு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது லேட்டஸ்ட் தகவல்களாகும்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}