தேர்தல் குக்கரில் வெற்றி விசில் அடிக்குமா.. விஜய் ரசிகர்கள் + தொண்டர்கள் விரும்புவது இதைத்தானா?

Su.tha Arivalagan
Nov 12, 2025,05:27 PM IST

சென்னை : 10 சின்னங்களைக் கொடுத்து அதில் ஒன்றை தங்களுக்குப் பொதுச் சின்னமாக ஒதுக்கித் தருமாறு தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது. அதில் எந்த சின்னம் கிடைக்கும் என்ற சுவாரஸ்ய எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.


2026ம் ஆண்டின் துவக்கத்தில் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. பெரிய கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகள் ஏற்கனவே தங்களின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த துவங்கி விட்டன. வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகும். ஆனால் 2026 தேர்தல் அனைத்து கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை  நிர்ணயிக்க போகும் தேர்தல் என்பதால் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் பரபரப்பாக மாறி உள்ளது.


விஜய் மீது மக்கள் பார்வை




தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் என புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தவெக.,விற்கு இது தான் முதல் தேர்தல் என்பதாலும், விஜய்யின் சினிமா செல்வாக்கு தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் தவெக மீது அரசியல் கட்சிகளும், மக்களும் கவனமாக தங்களின் பார்வையை பதித்துள்ளனர்.


தேர்தலை பொருத்தவரை கட்சியின் சின்னம் என்பது மிக மிக முக்கியம் என்பதால் பொதுவான 10 சின்னங்களை குறிப்பிட்டு, அவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை தரும் படி தேர்தல் கமிஷனிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பேட், விசில், ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட 10 சின்னங்களை குறிப்பிட்டு தவெக மனு அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.


விஜய்க்கு என்ன சின்னம்




அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் தவிர்த்து, தேர்தல் கமிஷனால் பட்டியலிடப்பட்ட சின்னங்களில் ஏதாவது ஒன்றை தான் புதிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் கேட்க முடியும். அந்த குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளர்கள் கேட்ட சின்னத்தை வேறும் யாரும் கேட்கவில்லை என்றால், முதலில் கேட்டவர்களுக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும் என்பது தான் தேர்தல் கமிஷனின் விதி. ஆனால்  அரசியல் கட்சிகளை பொருத்த வரை, மற்ற யாரும் கேட்காத சின்னமாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி, தேர்தலின் போது மக்கள் மனதில் எளிதில் பதியக் கூடியதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பார்த்ததும் தெளிவாக தெரியும் படி இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். அப்போது தான் வாக்காளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து, ஓட்டுக்களை பெற முடியும்.


விஜய் நடித்த பிகில் படம் தெலுங்கில் விசில் என்ற பெயரிலேயே வெளியானது. இந்த படம் அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆன படம். ஏற்கனவே "வி" என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் தான் விஜய் போட்டியிட போவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருவதால் விஜய்யின் "வி" சென்டிமென்ட் படி விசில் சின்னத்தை தவெக முன்னிலைப்படுத்தி கேட்க அதிக வாய்ப்புள்ளது. விசில் கிடைத்தால் அதை வைத்து ஈஸியாக பிரச்சாரம் செய்ய முடியும் என்று விஜய் தொண்டர்கள் விரும்புகிறார்கள். போக்கிரி படத்தில் ஆசினுக்கு விஜய் விசில் அடிக்கச் சொல்லித் தருவதையே கூட விளம்பரமாக்கி விட முடியும் என்பதும் ஒரு சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!


தவெக.,வின் இரண்டாவது சாய்ஸ், கிரிக்கெட் பேட்டாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு சின்னங்களுமே விஜய்யின் சினிமா ரசிகர்களை எளிதில் கவரும். மக்களின் மனதிலும் பதியும். அதேசமயம், ஆட்டோரிக்ஷா சின்னத்தை ரசிகர்கள் விரும்பவில்லை. காரணம், ரஜினியின் பாட்ஷா ஆட்டோ என எதிர்த் தரப்பு கையில் எடுக்கும் என்பதால் ரசிகர்களுக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் மனதில் பதிய வைக்கக் கூடியது, ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் தெளிவாக தெரியும் வகையில் வைக்க எளிதாக இருக்கக் கூடியது என்பது போன்ற காரணங்களை மனதில் வைத்தும் தவெக விசில் சின்னத்தை முதலில் வைத்து, அந்த சின்னத்தை கேட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


விஜய்க்கு விசில் கிடைக்குமா.. தேர்தல் குக்கரில் வெற்றி விசில் அடிக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்!