ஆன்மீகம் அறிவோம்.. தேவலோகத்திலிருந்து.. பூமிக்கு வந்தபோது.. சிவன் என்ன செய்தார் தெரியுமா?
- ஆ.வ. உமாதேவி
பிரம்மாவின் மகனான மதங்க முனிவர், தவம் செய்வதற்காக தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த போது, சிவன் பூமியை வெள்ளத்தில் மூழ்கடித்ததால், அவரால் தவம் செய்ய முடியவில்லை. நாரதரின் உதவியுடன் சிவபெருமானின் அருளை பெற்று, பின் சபரிமலை காட்டில் வசித்து வந்தார். இவரது சிஷ்யைகளில் ஒருத்தி, நீலி ஆவார்.
ஒருமுறை மதங்க முனிவர் சிவஸ்தல யாத்திரை சென்று விட்டார். அந்த நேரத்தில் சீதையை தேடி, இராமனும் லட்சுமணனும் இலங்கைக்கு செல்லும் வழியில், மதங்க முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு, அங்கு வந்தனர். வந்தவர்களை நீலி, வரவேற்று வந்தவர்கள் இராம, லக்ஷ்மணர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தாள். அவர்களுக்கு உணவளிக்க எண்ணினாள். ஆனாலும், மலைவாழ் பெண்ணான தன் கையால் ராஜகுமாரர்கள் சாப்பிடுவார்களா? என்ற சந்தேகத்தால், தயங்கினாள்.
அவளது தயக்கத்திற்கான காரணத்தை அறிந்த இராமன், பெண்ணே! மனிதர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரிவுகள் கிடையாது. அனைவரும் சமமே. உன் கையால் உணவு உண்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார் இராமன். மகிழ்ச்சி அடைந்த நீலி, அவர்களுக்கு உணவை பரிமாறினாள். உணவு உண்டபின் இராமனிடம், ஒரு வேண்டுதல் வைத்தாள் நீலி. ராமபிரானே! எனக்கு பிறவா நிலையான முக்தியை, அளியுங்கள் என்றாள்.
அப்போது ராமன், நீ பூமிக்கு வந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. நோக்கம் நிறைவேறியதும், நீ என் திருவடியை எய்துவாய் என்று கூறினார். இந்த பூலோகம் உள்ளளவும் நீ நதியாய் ஓடி மக்களின் பசி, தாகம் போக்குவாய் நீ பெருகி ஓடும்போது எழும் ஒலி இந்தக் காடு முழுவதும் பம்பை இசை போல், கேட்கும். எனவே உன்னை மக்கள் "பம்பை நதி" என்று அழைப்பர். இங்கிருக்கும் ஐயப்பனை காண வரும் பக்தர்கள், உன்னிடத்தில் பிதுர்க்கடன் நிறைவேற்றி, தங்கள் முன்னோர்களை மகிழச் செய்வர். உன் ஒரு துளி அந்த பக்தன் மீது பட்டால் கூட, அவன் நினைத்தது நிறைவேறும் என வரம் அளித்தார்.
இராமரும் அந்தப் பம்பை நதியில் பிதுர் கடன் செய்துவிட்டுத்தான் இலங்கைக்குச் சென்று, சீதையை அழைத்து வந்தார் என்பது புராணம். அந்த புண்ணிய நதியில் நீராடி சீதையை மீட்டு வரவேண்டிய வேண்டுதல், ராமனுக்கு நிறைவேறியது.
இன்று வரை, ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் பம்பையில் குளித்துவிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க ஆறுகள், ஸ்தலங்கள் முதலியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)