முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!

Su.tha Arivalagan
Nov 22, 2025,12:24 PM IST

- அ. வென்சி ராஜ்


பள்ளி விட்டு வெளியில் வந்தேன்..

வான் மகளின் மழை எனும் தோரணம் பார்த்து...

மனம் மகிழ்ந்தேன்...

இருந்தாலும் பொதுவெளியில்...

பயணிக்க வேண்டுமே என்று...

மழைக்கான உடையணிந்து வாகனத்தை கிளப்பியதுதான்....


சொட்டு சொட்டாய் நீர் துளிகள்...

குளிர்ந்த காற்றுடனே...

என் பட்டு முகத்தில் பட்டதுமே...

பறந்து போனது டென்ஷன் எல்லாம்...

முத்து முத்தாய் முகத்திலே நீ ...

முட்டி நின்று பார்த்ததனால்...

புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...

என் முகமும் ஆனதுவே....




எனதருமை மழைத்துளியே...

எங்கிருந்து வந்தாயோ... 

எட்டி நின்று பார்க்கும்போது. ..

இருந்த அழகை விட..

கிட்ட வந்து உன்னை தொட்டதும்.. 

சாதாரண பெண் இவளை கவிதை எழுத வைத்து விட்டாய்... 


பார்த்ததற்கு ஒரு கவிதை. ..

என் மேல் பட்டதற்கு ஒரு கவிதை...

உனை நானும் தொட்டதற்கு ஒரு கவிதை...

உனை விட்டதற்கு ஒரு கவிதை...

என...

உன்னை பற்றி மட்டுமே  எப்பொழுதும்

அடைமழையாய்  என்றும்

எழுதிக் கொண்டே இருப்பேனோ. ..

என் மேல் விழுந்த மழைத்துளியே... !


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)