மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்!
- ந. மகாலட்சுமி
போகித் திருநாள்
மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்,
பழையன கழிக்கும் பாங்குடன் தோன்றி,
அகத்தின் இருளைப் புறத்தே தள்ளி,
புதியன புகுத்தும் பொன்னாள் இதுவே!
கூரை வேய்ந்த குடிசை எங்கும்,
காப்புக்கட்டு கொண்டு காவல் பூண,
எரிக்கும் தீயில் ஈரம் தீர,
குளிர்ச்சி நீங்கி ஒளிதான் பெருக!
சிறுபீளை பூவும் ஆவாரங் கொத்தும்
மருந்தென மாறி வாசலில் நிற்க,
வேப்பிலை சூடி வினைப்பகை ஓட்டி
வேந்தன் இந்திரன் வியப்படையச் செய்வோம்!
போகிப் பறைமுழங்கப் புத்துயிர் பொங்க
புகையினில் கருகட்டும் பொல்லாச் சூது!
நகையினில் மலரட்டும் நல்லோர் உள்ளம்
நலிவுகள் தீர்ந்து நலங்கள் சூழ!
"பழையன கழிதலும் புதியன புகுதலும்"
நன்னூலார் சொன்ன நன்மொழி கொண்டு,
மனத்தின் அழுக்கை மாய்த்து அழித்து,
மங்கலத் தையினை வரவேற்போம் வாரீர்!
கதிரவன் தேரோட்டம் வடக்கு நோக்கித் திரும்ப
வீதி எங்கும் கோலம் இடுவோம்!
(ந.மகாலட்சுமி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர். இலக்கியத் துறையில் 50க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பணியாற்றுவது, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)