அத்தே.. அத்தே...!
- கா.சா. ஷர்மிளா
ஒவ்வொரு குழந்தையும் சிறப்புதானே.. கடவுள்களைப் பிரித்துப் பார்க்க முடியுமா.. அப்படித்தானே குழந்தைகளும்.
குழந்தைப் பருவம் போல இனிமையானது எதுவுமே கிடையாது.. அதிலும் குழந்தைகளின் ஒவ்வொரு நகர்வும் ஒரு சொர்க்கம்தான்.. அந்த அனுபவத்தின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைத்தான் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
நான் பொது மாறுதலில் மாற்றல் பெற்று பள்ளிக்கு சென்ற முதல் நாளிலிருந்து ஒரு குழந்தை என்னை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கும். சில நேரங்களில் ஒரு இடத்தில் தங்காது வெளியே வெளியே ஓடுவாள். வாயின் ஓரத்தில் இருந்து எச்சில் வழிந்துக் கொண்டே இருக்கும். பேசவே மாட்டாள். பேசவே அவளுக்கு வராது.
என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்றால் என்னை தட்டித் தட்டி தான் கேட்பாள், சரியாக 11 மணிக்கு எல்லாம் தூங்க ஆரம்பித்துவிடுவாள். 12 மணிக்கு எழுந்திருப்பா. உடனே சாப்பிடணும் அவளுக்கு. என்னை தட்டி தட்டி கேட்பாள். என்னிடம் உள்ள சாக்லேட்டை கொடுத்து சமாதானப்படுத்தி 12:40 வரைக்கும் சமாதானப்படுத்தி மதிய சாப்பாடு சாப்பிட வைப்பேன்.
அவள் பெயர் நிவேதா. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். இரண்டு நாளில் என்னிடம் நன்று நன்கு பழகி விட்டாள். அவளின் அம்மா கூட என்னிடம் சொன்னார்கள், டீச்சர் என் பொண்ணு உங்ககிட்ட நல்லா பழகிட்டா என்று.
மூன்று மாதங்கள் சென்று அந்தக் குழந்தை என்னைப் பார்த்து "த்தே... த்தே"... என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரே சந்தோஷம். ஏனென்றால் என்னை அத்தை என்று யாரும் கூப்பிட்டதே இல்லை. எல்லோரும் ஆன்ட்டி என்று கூப்பிட்டு தான் பழக்கம். நிவேதா தான் முதலில் த்தே.. என்று கூப்பிட்டாள். முதலில் என்னை அத்தை என்று கூப்பிட்ட குழந்தை அவள் தான்.
அவள் முதலில் பேசிய வார்த்தையும் அது தான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இறைவனின் படைப்பில் எத்தனை வேறுபாடு.. அக்குழந்தை மற்ற குழந்தைகள் போல் இல்லை she is special child!
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)