தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

Su.tha Arivalagan
Dec 04, 2025,02:58 PM IST

- சரளா ராம்பாபு


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 173 படத்தின் இயக்குநர் யார் என்பது ஒரு பக்கம் சஸ்பென்ஸாக இருந்து வரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் யார் என்ற சஸ்பென்ஸும் சுவாரஸ்யமாகியுள்ளது. அவரா இவரா என்று பலரது பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகின்றன.  


கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 173 வது படத்தை கருத்தில் கொண்டு தலைவர் 173 என்று இப்படத்திற்கு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டது.  சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற படத்தை இயக்கியிருந்தார் சுந்தர்.சி.


இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கடைசி நேரத்தில் சுந்தர். சி. விலகிக் கொண்டார். எனவே இந்த படத்தை அடுத்து யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பார்க்கிங் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக ஒரு தகவல் அடிபட்டு வருகிறது. 




மேலும் படத்தில் சாய் பல்லவி முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. அவர் ஹீரோயினா அல்லது வேறு ஏதேனும் முக்கியமான ரோலில் வருகிறாரா என்று தெரியவில்லை. மறுபக்கம் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் இல்லை என்று சொல்கிறார்கள்.


இளம் சென்சேஷனாக வலம் வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இவர் சமீபத்தில் வெளியான பிரதீப் ரங்கநாதனின் ஹிட் படமான டூட் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் குறித்த பல முக்கிய அம்சங்கள் வேகமாக இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும், டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று அனைத்து விவரங்களும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)