யார் குப்பைக்காரன்?
- கவிஞர் சு. நாகராஜன்
வேட்டி சட்டை
மாட்டிக் கொண்டு
வீதியிலே துப்பி
எச்சில் படுத்துவார்
யார் குப்பைக்காரன்?
அவர் பெரிய படிப்பு
எல்லாம் படித்திருக்கிறார்
கடையில் பழத்தை
வாங்கி தின்றுவிட்டு
தோலை வீசி எறிகிறார்
யார் குப்பைக்காரன் ?
அளவாக வாங்கி
மீதி இல்லாமல்
சாப்பிட வேண்டும்
சாப்பிட்ட மீதியை
சரியான இடத்தில்
போடத் தெரியாத
மாந்தர் அல்லவா நீ
யார் குப்பைக்காரன் ?
பண்டிகை வந்து
கொண்டாட்டம் போட்டாய்
மறுநாள் வீதியெல்லாம்
குப்பை தான் -இங்கு
யார் குப்பைக்காரன் ?
ஓ! நான் குப்பைக்காரன்
காரணம் என்னவென்று
கேட்டேன் ?
படிக்கவில்லையாம்
படிக்கவில்லை என்றால்
உனக்கு இந்த வேலை தான்
யார் சொன்னது ?
வேலை செய்வதில்
ஏற்றத் தாழ்வா -யார்
சட்டம் இயற்றியது?
நீதான் முடி திருத்த
வேண்டுமாம்- நீ தான்
துணி துவைக்க
வேண்டுமாம்- நீ தான்
சாக்கடையை சுத்தம்
செய்ய வேண்டுமாம்
யார் இங்கு
ஆணை போட்டது ?
ஓ அதற்குத்தான் நானா?
சரி செய்கிறேன்
நாளை!
அதோ குப்பைக்காரன்
அவனைக் கூப்பிடு
அவன் யார் ?
குப்பைக்காரனின் மகன்
இவள் யார்
குப்பைக்காரனின்
மனைவி
அழகான பட்டங்கள்
என்னடா இந்த உலகம்
அசுத்தம் செய்பவன்
தானே சுத்தம்
செய்ய வேண்டும்
தவறு செய்கிறவன்
தானே தண்டனை
பெற வேண்டும்
இங்கு குப்பைகளை
வீசியது உன் தவறு
வீசிய குப்பைகளை
சுத்தம் செய்யாதது
உன் தவறு
காலையில் எழுந்து
வீட்டின் முன் நின்று
அதிகாரத்தொனியில்
ஒரு வாரமாய் குப்பை
எடுக்கவில்லை
வாடை வீசுகிறது !
இங்கே குப்பையாக்கியவன்
செய்த தவறா அல்லது
குப்பை எடுக்காமல்
சென்றது தவறா
குப்பை எடுப்பவன்
குப்பைக்காரனா
மனிதா விடையை
நீயே கூறிடு
(சு. நாகராஜன் , அரசு தொடக்கப்பள்ளி அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)