- ந. தீபலட்சுமி
அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை
கைகளை பிசைந்தாள்...
நகங்களைக் கடித்தாள்...
அங்கும் இங்கும் முன்னும் பின்னும் நடந்தாள்...
என்ன செய்வது
ஒரே குழப்பம்
நடந்து கொண்டிருந்தவள் சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.
நேற்றைய நிகழ்வுகள் அவள் நினைவில். அப்பப்பா... என்ன ஒரு பார்வை... அந்தச் சிரிப்பு... அவன் கண்களில் இருந்த குறும்பு... மெல்ல காதோரம் அவன் சொன்ன வார்த்தைகள்... இப்பொழுதும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு.
டக்கென எழுந்தாள்...
முகத்தில் முத்து முத்தாக வியர்த்தது. அவசரமாக சேலை முந்தானையில் ஒற்றி எடுத்தாள்.

கடிகாரத்தை பார்த்தாள்.
மணி பதினொன்று.
என்ன நேரம் இவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது?
ஐயோ... அவன் காத்துக் கொண்டிருப்பான்....
கைகள் சில்லிட்டது...
இமைகளை சிறிதே மூடினாள். கண்களுக்குள்ளும் அவன்.
" ஐ'ம் வெயிட்டிங்"
பட்டென கண்களைத் திறந்தாள்.
மீண்டும் அங்கும் எங்கும் நடக்க தொடங்கினாள்
மண்டைக்குள்ளும் மனதிற்குள்ளும் அவன்.,.
பிரிட்ஜை திறந்து ஜில்லென்ற தண்ணிரை அப்படியே வயிற்றுக்குள் சரித்தாள்.
மெல்ல தலையை திருப்பி டீபாய் மேலிருந்த அந்த புத்தம் புது செல்போனை பார்த்தாள்.
அவன் வாங்கித் தந்தது...
நேற்று...
புது வரவாம்.... அனைத்து வசதிகளும் உள்ளதாம்....
கொள்ளை அழகு... அவனைப் போலவே...
நேரம் மதியம் ஒரு மணி
ஆஹா... மதிய உணவு இடைவேளையே வந்து விட்டது. மெதுவாக செல்போனை கையில் எடுத்தாள்.
புத்தம் புது போன்.
அவளைப் பார்த்து கண் சிமிட்டியது.
வெகு நேரம் கைகளில் வைத்திருந்து விட்டு மீண்டும் அதன் இடத்திலேயே வைத்தாள்.
நான் செய்வது சரியா....
இது சாத்தியமாகுமா...
என் குடும்பம் என்னை பற்றி என்ன நினைக்கும்...
திடீரென மனம் குழம்பத் தொடங்கியது.
அச்சத்திலும் குழப்பத்திலும் அப்படியே சோபாவில் சரிந்தாள்.
ஆழ்ந்த தூக்கம் அவளை ஆட்கொண்டது.
கனவிலும்.... அவன்....
"சொல்ல மாட்டாயா?"
'டிடிங்....டிடிங்...'
என காலிங் பெல் சத்தம்.
வாரிசுருட்டி எழுந்தாள்.
கடிகாரத்தை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது.
நேரம் மாலை 4 மணி.
தலையில் அடித்துக் கொண்டாள்.
"இவ்வளவு நேரமா தூங்கிவிட்டேன்?"
ஓடி சென்று கதவை திறந்தாள்.
வெளியே...
ஹெல்ப்பர் பொன்னம்மாள். ஆம்.. வேலைக்காரி என சொல்லக் கூடாதாம். அவன் சொல்லியது.
"என்னம்மா... நல்ல தூக்கம் போல?"
"ஆமாம்... கொஞ்சம் அசந்துட்டேன்..." அசடு வழிந்தாள் அவள்.
"உடம்புக்கு ஏதேனும் பண்ணுதாம்மா?"
"அதெல்லாம் ஒண்ணும்மில்லை...நீ போய் வேலையை பாரு."
பொன்னம்மாள் அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.
"என்னம்மா நீங்க சாப்பிடலையா? எல்லாம் அப்படியே இருக்கே...?"
கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தாள் அவள்.
"ஏனம்மா ஒரு மாதிரியா இருக்கீங்க.. நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் உங்கள் முகமே சரியில்லையே..."
"ஆங்... அதெல்லாம் ஒண்ணும்மில்லை.."வார்த்தைகள் தடுமாறியது.
"டாக்டரை கூப்பிடவாமா?"
"அச்சச்சோ... அதெல்லாம் வேண்டாம். நான் நல்லா தான் இருக்கேன்"
"ஏம்மா உங்களை தெரியாத எனக்கு? உங்க மனசுல ஏதோ இருக்கு. சும்மா சொல்லுங்கம்மா"
உரிமையாக கேட்ட அவளை வெறித்துப் பார்த்தாள் இவள்.
இவளிடம் சொல்லலாமா வேண்டாமா. என்னைப் பற்றி என்ன நினைப்பாள்.
"ஆகா... இது புது மாடல் போன் ஆச்சே. ரொம்ப நல்லா இருக்கு. எப்போ வாங்கினீங்க?" என்ற பொன்னம்மாளின் கேள்வி அவளைக் கூச்சமடைய செய்தது.
"அது...அது... வந்து ...."
தடுமாறியவளை ஏற இறங்க பார்த்தாள் பொன்னம்மாள்.
பளிச்சென்ற முகம். பெரிய பெரிய விழிகள்... கூர்மையான நாசி.. மடிப்பு கலையாத சிம்பிளான காட்டன் சேலை... பெப்பர் சால்ட் முடி... அதை அழகாக வாரி இருந்த பாங்கு... பார்த்தவுடன் கைகூப்பி வணங்கச் செய்யும் உருவம்... 60 வயது அழகான கல்பனா. இரு மகன்களும் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசிக்கின்றனர். 2000 பேர் வேலை செய்யும் மிகப் பெரிய கம்பெனி முதலாளியின் மனைவி.
இன்று ஏனோ சரி இல்லை.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பொன்னம்மாளை மெல்ல அழைத்தாள் அவள்.
"இது.. இது... ஐயா வாங்கி தந்தது பொன்னம்மாள். இந்த மாடர்ன் உலகத்துல பொன்னம்மாள் கூட ஐபோன் வைத்திருக்கிறாள். நீ இன்னும் இந்தப் பழங்காலத்து ஃபோனையே வைத்திருக்கிறாயே என ஐயா ஒரே திட்டு.
அது மட்டும் இல்ல.. எனக்கு இந்த போன வாங்கி கொடுத்துட்டு , whatsapp மெசேஜ் எப்படி பண்ணனும்னு சொல்லிக் கொடுத்துட்டு போனாரு. இன்னைக்கு ஆறு மணிக்குள்ள நான் அவருக்கு "ஹாய்"என்ற ஒரு வார்த்தையை மெசேஜ் பண்ணனும்னு சொல்லிட்டு போயிருக்காரு. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். எனக்கு எப்படி அனுப்புவது என்றே தெரியவில்லை. நீ எனக்கு கொஞ்சம் சொல்லி தரியா? "
என சின்ன குழந்தை போல் கைகளில் ஃபோனை வைத்துக் கொண்டு அவள் படபடப்புடன் கேட்ட விதம்... பொன்னம்மாள் 'கொல் 'என சிரித்துவிட்டாள்.
(ந. தீபலட்சுமி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)
நாற்காலி
எழுத்தும் ஓட்டுமாக.. அதிகாரம் மக்கள் கையில் வந்த நாள்!
இந்தியக் குடியரசு தினம்: ஜனநாயகத்தின் எழுச்சி மற்றும் பெருமிதம்!
சாக்லேட்டுக்கு குட்பை! தேவக்கோட்டையில் கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தினம் கொண்டாட்டம்!
வீரம் செழித்திடும் இமயத்தில்.. பாரத கொடியை பார்புகழ நாட்டிடுவோம்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
எழுத்து!
தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
77வது குடியரசு தினமும்.. வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவும்.. சிறப்பு!
{{comments.comment}}