தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ

Su.tha Arivalagan
May 07, 2026,10:56 AM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எங்களது தலைவரை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக நான் இந்தியில் பேசுகிறேன் என்று சிவகாசி தவெக எம்எல்ஏ கீர்த்தனா கூறியுள்ளார்.


சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தவெக சார்பில் எம்எல்ஏ ஆகியுள்ளார் கீர்த்தனா. அவர் இந்தியில் பேட்டி கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.


கீர்த்தனா இதுகுறித்து ஏஎன்ஐ செய்தியாளருக்கு அளித்துள்ள பேட்டியின்போது கூறியதாவது:




முதலில் நான் அனைவருக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இந்தியில் பேசுவதை பலரும் ஒரு சர்ச்சையாகப் பார்க்கிறார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு தொண்டராகவும், ஒரு தலைவராகவும், தமிழ்நாட்டில் இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


மற்ற மாநிலத்து மக்களிடம் அவர்களின் மொழியிலேயே நாம் பேசும்போது, அது அவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும். அதனால்தான் நான் இந்தியில் பேசுகிறேன். எனது கட்சியின் பிரதிநிதித்துவத்தை இந்தியா முழுவதும், ஏன் மற்ற நாடுகளிலும் கூட அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்.


அனைவரும் எனது தலைவரைப் பற்றியும், எனது கட்சியைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். சிவகாசி தொகுதியில் இரண்டு பெரும் ஜாம்பவான்களை எதிர்த்து, 29 வயதே ஆன நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இதிலிருந்து நான் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், அரசியல் என்பது பணம் அல்லது சாதியைப் பார்த்து பயப்பட வேண்டிய ஒன்றல்ல. அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும், அனைவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். அதற்கு நான் ஒரு உதாரணம் மட்டுமே."


மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். துரோகம் அல்லது முதுகில் குத்துவது போன்ற விஷயங்களை மக்கள் மறந்துவிட்டார்கள். எங்கள் கட்சியில் சாதி, மதம் அல்லது பணபலம் போன்ற எந்தத் தடைகளும் இல்லை. மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் ஒரே இலக்கு.


எனது தலைவர் விஜய் அவர்கள் விரும்பினால், எனது கட்சி விரும்பினால், மற்றும் மக்கள் விரும்பினால் அமைச்சர் பதவி எல்லாம் தானாக நடக்கும். என் தலைவரின் வழிகாட்டுதலின்படி எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.


விஜய் அவர்கள் முதல்வரானதும் எடுக்கப்போகும் முதல் முடிவு பற்றி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் கீர்த்தனா.