பத்ம விருதுகள் ஏன் வழங்கப்படுகின்றன.. யாருக்கெல்லாம் அது கிடைக்கும்..?
- ஆ.வ. உமாதேவி
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவுக்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும், 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள் அல்லது சேவைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ, பத்மபூஷன், மற்றும் பத்ம விபூஷன் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் பொதுச் சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.
இன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பன்னிரண்டு பேர் தமிழ்நாட்டிலிருந்தும் ஒருவர் புதுச்சேரியிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
அதன்படி தமிழ்நாட்டைச் சார்ந்த காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்பிரமணியன் (கலை) ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை) ஆர். கிருஷ்ணன் (கலை) ஹெச். வி. ஹண்டே (மருத்துவம்) புண்ணிய மூர்த்தி நடேசன் (மருத்துவம்) கே. ராமசாமி (அறிவியல் மற்றும் பொறியியல்) கே. விஜயகுமார் (சிவில் சர்வீஸ்) ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை) சிவசங்கரி (இலக்கியம் மற்றும் கல்வி) திருவாரூர் பக்தவச்சலம் (கலை) வீழி நாதன் காமகோடி (அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் பழனிவேல் விளையாட்டு ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன் விருது 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
13 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு மருத்துவத்துக்கான விருதும், எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு சமூக சேவைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள நடிகர் மம்முட்டிக்கு கலைக்கான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த, நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருதும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்
ஓதுவார் சுவாமிநாதன், பன்னிரு திருமுறைகளை இசை வடிவில் பாடி சைவ சமயத்திற்கு பெரும் பங்காற்றியவர். இன்னிசைகளில் வல்லவரான இவர் பல ஆண்டுகளாக பக்தி இசை சொற்பொழிவுகள் மற்றும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகளை பக்தி டிவியில் நடத்தியுள்ளார்.
திருத்தணி முருகன் கோவில் உட்பட பல ஆலயங்களில் திருமுறைகளை பொருள் விளங்குமாறு பாடி சேவையாற்றுபவர். திருவாசகம், போற்றித் திரு அகவல் போன்றவற்றை தத்ரூபமாக பாடி, மக்களை சிவ பக்தி பரவசத்தில் ஆழ்த்துவதில் வல்லவர். எங்கள் ஊரைச் சேர்ந்த சுவாமிநாதன் ஐயாவுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான கலை பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது, எங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் பெருமை தரக்கூடிய செய்தியாகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொடுக்கும் நிகழ்வாகவும் உள்ளது.
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)