Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
Oct 19, 2025,05:32 PM IST
- ஷீலா ராஜன்
சென்னை: தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் அலை அலையாக போவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும் பலருக்கும்.
ஏன் இந்த கூட்டம்?.. ரயில்களிலும் பேருந்துகளிலும் இவ்வளவு இட பற்றாக்குறை.. ஏகப்பட்ட குறை இருக்கும் நிலையிலும், எங்கே போகிறார்கள் இவர்கள்?.. இவர்கள் யாருமல்ல.. வாய்ப்பு கிடைக்கும்போது, சொந்தங்களைத் தேடி, பாச பந்தங்களைத் தேடி, உற்றார் உறவினர்களைத் தேடி, தங்களது வேர்களைத் தேடி ஊர்களுக்குப் போகும் கூட்டம் இது. சுருக்கமாக சொன்னால் பாசக்கார பயலுக.. விட்டுட்டு இருக்க மாட்டாய்ங்க!
பாசம் மறந்து போய்விட்டது, நேசம் குறைந்து போய்விட்டது என்பவர்கள் எல்லாம் வாயடைத்து போய் இருக்கின்றனர் இந்த அலை மோதும் கூட்டத்தைப் பார்த்து. அலைபேசிக்குள் மூழ்கிப்போன மக்களுக்கு, நெஞ்சம் மறத்து போய்விட்டது என்பவர்கள் கொஞ்சம் நிமிர்ந்து இவர்களைப் பாருங்கள்.
பண்டிகைகளுக்கும் திருவிழாக்களுக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் சொந்த ஊருக்கு எப்படியாவது போய்விட வேண்டும் என்கின்ற தவிப்பு மக்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இது மனித மாண்பை காட்டுகிறது. எத்தனை நண்பர்கள் இருப்பினும் குடும்பங்களில் உள்ள பாச பிணைப்பினை எடுத்து இயம்புகிறது.
தனக்காக மட்டுமே சுயநலமாய் வாழ தொடங்கிவிட்ட சமுதாயமாய் மாறிவிட்டோம் என்று புலம்பியவர்கள் கடைகளை சென்று பாருங்கள். அவர்களுக்காக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்திற்காக, சொந்தங்களுக்காக, குழந்தைகளுக்காக, கணவருக்காக, மனைவிக்காக, உடன் பிறந்ததற்காக, தங்கள் உழைப்பினை ஊதியத்தினை நேரத்தினை செலவிடுகிறார்கள்.
எத்துணை செல்போன்களும் இதர தகவல் தொடர்பு சாதனங்களும் உறவுகளுக்குள் ஊடுறுவி, இடையூறு செய்தாலும், அன்பு எப்போதும் நிரம்பி வழியத்தான் செய்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் நாம் தான் உன்னிப்பாக கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளுக்குள்ளே அனைவருக்கும் சொந்தங்களின் நேசிக்கின்ற இயல்பு பாரம்பரியமாகவோ, பழக்கத்திலோ இல்லை. உயிர் அணுக்களிலேயே இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அதைத்தான் இந்த டிராபிக் ஜாம் நிரம்பி வழியும் பேருந்துகளும் ரயில்களும் நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன.
நெஞ்சில் நேசம், தமிழக மக்களுக்கு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியாவது ஊருக்குப் போக வேண்டும். அப்பா அம்மாவை, தாத்தா பாட்டியைப் பார்க்க வேண்டும். அக்கா தங்கையுடன் அளவளாவ வேண்டும்.. நண்பர்களைப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட பாசம்தான் இவர்களை உந்தித் தள்ளி ஊர்களை நோக்கி நகர்த்தி வருகிறது.
எங்கேயோ ஒரு புள்ளி எல்லோரையும் இனனக்கின்றது. அது தாயாகவோ தகப்பனாகவோ தமக்கையாகவோ தாத்தா பாட்டியாகவோ உள்ளது. ஆக மொத்தம் அன்பு உயரியது. இந்த மாதிரி கொண்டாட்டங்களில் அது உயிர்ப்படைகிறது. ஆக, பண்டிகைகளும் திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் மேம்போக்கானவை அல்ல, இவை உள்ளங்களோடு உறவாட வைக்கிறது. வாங்க நாமும் ஒண்ணா மண்ணா பழகி தீபாவளியை கொண்டாடலாம்.
இந்த காட்சிகள் பொங்கலுக்கும் தொடரும்!