ஆம்புலன்ஸ் தெரியும்.. அதுக்கு ஏன் அந்தப் பேரு வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?
- சொ. மங்களேஸ்வரி
நோயாளர் ஊர்தி ஆம்புலன்ஸ் என்பது கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட அல்லது விபத்தில் காயம் பட்ட நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வடிவமைக்கப்பட்ட ஊர்தி. தீவிர நோய்க்கு அல்லது விபத்திற்கான முதலுதவி சிகிச்சையை ஊர்தியிலேயே பெறும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டது இது.
எச்சரிக்கை விளக்கு மற்றும் சங்கொலி ஏந்திச் செல்லும் ஆம்புலன்ஸ் என்னும் இந்த ஆங்கிலச்சொல் ஆம்புலரே என்ற லத்தின் வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்ட 'நட' அல்லது 'நகர்த்து' என்ற பொருளில் அறியப்பட்ட வார்த்தையாகும். முதலில் போர்களில் காயம் பட்டவர்களை அப்புறப்படுத்த பயன்பட்ட நோயாளர் சுமைவண்டிகள் இவை. இதன் வரலாறு நோயாளிகளைக் கட்டாயப்படுத்தி வண்டிகளில் ஏற்றி சென்ற நாள் முதல் தொடங்குகின்றது.
டொமினிக் ஜீன் லாரே என்பவர்தான் நவீன ஆம்புலன்ஸ் சேவையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். மாவீரன் நெப்போலியனின் இராணுவத்தில் மருத்துவராக இருந்த இவர், போர்க்களத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மீட்க பறக்கும் ஆம்புலன்ஸ் என்ற முறையை 1792-இல் அறிமுகப்படுத்தினார்.
ஆம்புலன்ஸில் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும் ஸ்டார் ஆஃப் லைஃப் என்ற சின்னம் பயன்படுத்தப்படும். இதில் உள்ள ஆறு முனைகளும் மீட்புப் பணியின் ஆறு முக்கிய நிலைகளைக் குறிக்கின்றன (கண்டறிதல், அறிவித்தல், பதிலளித்தல், இடத்திலேயே கவனிப்பு, பயணத்தின்போது கவனிப்பு, மருத்துவமனைக்கு மாற்றுதல்).
ஆம்புலன்ஸின் முன்பக்கத்தில் AMBULANCE என்ற வார்த்தை தலைகீழாக (கண்ணாடி பிம்பமாக) எழுதப்பட்டிருக்கும். இது முன்னால் செல்லும் வாகன ஓட்டுநர்கள் தங்கள் பின்னால் உள்ள கண்ணாடியில் பார்க்கும்போது, எழுத்துக்களைச் சரியாகப் படித்து உடனே வழிவிடுவதற்காக வடிவமைக்கப்பட்டது.
சாலைகளில் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, கடினமான நிலப்பரப்புகளில் செல்ல ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் (Air Ambulance) மற்றும் கடலோரப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் படகு ஆம்புலன்ஸ் (Boat Ambulance) எனப் பல வகைகள் இன்று புழக்கத்தில் உள்ளன.
விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை உயிர் பிழைக்கும் வாய்ப்பை 80% அதிகரிக்கிறது. இந்த 'கோல்டன் ஹவர்' தத்துவத்தின் அடிப்படையிலேயே ஆம்புலன்ஸ்கள் அதிவேகமாகவும், முதலுதவி வசதிகளுடனும் இயக்கப்படுகின்றன.
2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் GVK EMRI (எமெர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்) மூலம் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது . இது தனியார் பங்களிப்புடன் செயல்படும் இந்தியாவில் உயிர்காக்கும் அவசர மருத்துவ உதவிக்காக 24/7 இயங்கும் இலவச சேவை ஆகும்.
இந்த சேவை தற்போது தேசிய சுகாதார இயக்கத்தின் உதவியுடன் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் இணைந்து வழங்கப்படுகின்றது. கட்டணமில்லா இந்த சேவையை அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணை எந்த நேரத்திலும் அழைத்து எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் இருப்பார்கள். சராசரியாக 20 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கின்றது. முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் டயாலிசிஸ் நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
வசதியற்றோர், வசதி படைத்தோர் என்ற பாகுபாடு இதற்கு இல்லை. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தீவிர நோய்க்கு காலத்தே விரைந்து கிடைக்கும் சிகிச்சை முக்கியமானது. இந்த ஆம்புலன்ஸ் உதவி மூலம் விரைந்து செல்ல முடியும். சொகுசு கார்களை வைத்திருந்தாலும் பெருநகரங்களில் இருக்கும் சாலை நெருக்கடிகளில் இந்த உறுதியே தன் ஒலி மூலம் பிற வாகனங்களை விலக வைத்து , உரிய நேரத்தில் மருத்துவமனையைச் சென்றடைவதோடு கடக்கும் பாதையில் ஒலியைக் கவனித்து, அதில் செல்வோர் உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரு நிமிடம் முகம் தெரியாத நபர்களின் பிரார்த்தனையையும் பெற உதவி செய்கின்றது.
தற்போது 9445030725 என்ற புதிய whatsapp சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் Hi என அனுப்பி இருப்பிடத்தைப் பகிர்ந்து உதவியை பெற்றுக் கொள்ளலாம். 108 அவசர மருத்துவ உதவி 102 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு 112 இந்தியாவின் ஒருங்கிணைந்த அவசர உதவி எண் போலீஸ் மற்றும் தீயணைப்பு உதவிக்கு. உதவிக்கு அழைப்போம்! உயிர் காப்போம்!
(சொ. மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)